பக்கம்:உத்திராயணம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 லா.ச.ராமாமிருதம்



ஆனால், இதெல்லாம் என்ன அசட்டு யோசனை? யாருக்கு என்ன பயன் எனச் செவிட்டில் அறைந்து விளக்குவதுபோல் புறப்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.

கண்ணன் Bond box உடன் நிற்கிறான். எப்போ கையில் பெட்டியைத் தூக்கிவிட்டானோ இரவு வீடு திரும்பப் போவதில்லை என்று அர்த்தம். பாட்டி வீடோ, மாம்பலத்தில் ரவியோ-மூன்றாம் காட்சி பார்த்துவிட்டு மிச்சம் போதுக்குத் தலைக்கு அணை பெட்டியை வைத்துக்கொண்டு ப்ளாட்பாரத்தில் துரங்கினால்-எனக்கென்ன? அவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தங்களுடைய சந்தோஷம் தங்களுக்குச் செலுத்திக் கொள்ளும் முதல் கடமை, மிச்ச மேல்லாம் துச்சம் எனப் பாவிக்கும் அவர்கள் தத்துவத்தில் “எங்கே போகிறாய்? எப்போ வருவாய்?” எனும் கேள்வியே அவர்களுடைய அல்வாத் துண்டில் அவர்களுக்கு மயிர் சிக்கினாற்போல் எனக்கும் வயிற்றைக் குமட்டு கிறது.

கண்ணன் என் எதிரே நின்றுகொண்டிருக்கையிலேயே, சேகர் அவனைத் தாண்டி அவசரமாகப் போகிறான். Boss அவனுக்கும் சேர்த்துச் சொல்லிவிட்டதாக அவனுடைய அர்த்தம். ஆகையால் அவன் தனியாகச் செலவு பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இப்போ எனக்கு நினைவு வருகிறது. எல்லாம் ஏற்கெனவே நினைப்பிலிருப்பவைதான். படங்கள் திடுக்கென்று எகிறுகின்றன.

இப்போதான் மூன்று வருடங்களுக்கு முன் என் தாய் காலமானாள்.

நான் வழக்கமாய் வீடு திரும்பும் வேளைக்குச் சற்று நேரம் தப்பி வந்தாலும் வாசற்படியில் வந்து உட்கார்ந்து விடுவாள்.

“என்னம்மா இங்கே உட்கார்ந்திருக்கே?”

“ஒன்றுமில்லே, உள்ளே ஒரே புழுக்கமாயிருந்தது. ஏதோ காத்து சில்லுனு வரதேன்னு...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/22&oldid=1149939" இலிருந்து மீள்விக்கப்பட்டது