பக்கம்:உத்திராயணம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடை பெற நில் 21



“ஐயரே, நாளைக்கு சஷ்டி!” மூணு ஒற்றை ரூபாய் நோட்டுக்களை அவர் கையில் திணித்தான். “ஊசி போட்டுக்க ஆஸ்பத்திரிக்கு நாளை காஞ்சிபுரம் போவணும். விடிகாலையிலேயே அபிஷேகத்தை முடிச்சுக் கொடுத்துடுங்க!”

“அப்படியே செய்துட்டாப் போவது!”

அவன் என்னைக் கண்டு கொண்டதாவே காட்டிக் கொள்ளவில்லை. போய்விட்டான். கண்ணாடியின் பின்னாலிருந்து, குருக்களின் திரைபூத்த கண்கள், பின்னுக்கு வாங்கிக்கொண்டே போகும் அவன் முதுகின்மேல் விஷம் கக்கின.

“தந்து! தந்து ” பல்லைக் கடித்தார். மூணு தலைமுறையா இதே மூணு ரூவாதான்! அன்னிக்கு வெள்ளி விக்டோரியா! இன்னிக்குக் காயிதச் சிங்கம்-ஒண்ணுக்கு மூணு அதில் குறைச்சலில்லை. அந்தப் பொம்ம்னாட்டி தலைக்கு இவன் கேட்டது, ஏன், அதுக்குமேலேயே மூணு ரூபாய்க்குக் கிடைச்சுண்டிருந்தது!

இன்னிக்கு இவள்மேல் அடுக்கக் கால்வரைக்கும் வரட்டி மூணு ரூபாய்க்குக் கிடைக்குமா? மூணு ரூபாய் கொடுக்கறான். பொங்கலில் முந்திரிப்பருப்பு இல்லை என்கிறான்! முருகப்பெருமான் வேணுமானால் இவனை ஆசீர்வதிக்கட்டும், 'முதலியாரே, கையைப் பிடிங்க'ன்னு அர்ச்சனைக்குத் தத்தம் குத்தறப்போ எனக்குச் சபிக்கத் தான் வரது! ஆனால் நான் எங்கே இப்போ பூஜை, அர்ச்சனை யெல்லாம் பண்ணறேன்? சங்கரன் பென்சின் கொடுத்துட்டானே! சம்பளமில்லாத பென்சின். ராமாமிருதம் உனக்குப் பென்ஷனா? மொத்தமா வாங்கிட்டியா?

குருக்கள் இஷ்டப்பட்டால் ஒழுங்காய் உச்சரிப்பார் என்று தெரிகிறது. பென்ஷனுக்கும் பி. எஃப்-க்கும் வித்தியாசம் தெரியும் என்று தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/31&oldid=1155889" இலிருந்து மீள்விக்கப்பட்டது