பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றறிந்திருந்தாலும் இன்ப எழுச்சிக்கு மாமன்னர்கள் கள்ளுண்டனர்.

‘பொற்பு விளங்கு புகழ்அவை நிற் புகழ்ந்து ஏத்த
இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணம்கமழ் தேறல் மடுப்பு நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும,

வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே’

என்பான் மாங்குடிமருதன்.

“சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகள் பெறினே யாம்பாடத்
தான்மகிழ்ந்துண்னும் மன்னே”

என்று அவ்வையும் அதியமானுடன் குடித்துப் பாடியுள்ளாள்.

சங்க இலக்கியத்தில் கள், நறவு தேறல் எனப்பல பெயரில் மக்கள் மது அருந்திய செய்தி வருகின்றது. ஆனால் அளவறிந்துண்டுள்ளனர். எவரும் தள்ளாடியதாகவோ மக்களால் மதிக்கப்படாதவராகவோ எங்கும் காணப்பட வில்லை.

வந்தேறிகளான ஆரிய மக்கள் வந்த பின்னர்தான் மட்டு மீறிய மது மாந்தனை இழிநிலைக்குத் தள்ளி அழிக்கலாயிற்று. அவர்கள் கொண்டு வந்த ‘சோமபாணம்’ ‘சுரபாணம்’ இரண்டும் மக்கள் முதல் மன்னர்வரை மாள்வித்தன. பரத்தமையும் அவர்களின் வாழ்வுறவே. அதனால்தான் வள்ளுவன் கூட பேரின்ப மயக்கம் கள்ளுக்கில்லை. கன்னியர்க்குண்டு என்று கூறிவிட்டுப் பின்னர் கள்ளுண்ணாமையையும் விலை மகளிரான பார்ப்பனப் பரத்தைகளையும் சாடுகிறார்.