பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பருகுகிறது. நமது அறியாமையைத் தெளிவித்து, பயங்கரமான உண்மைகளால் நம்மை அச்சுறுத்துகின்ற தற்கால உலகத்தே, இளைஞர்க்குரியதாய் இனிய நறுமணம் கமழ்வதாய் உள்ள நூற்பிரதி ஒருபொழுதும் முடிவடையாதபடி நீண்டு விரிந்து கொண்டே செல்லும் இடம் ஏதேனும் உண்டென்று கனவு காணக்கூடுமானால், அந்த இடம் பாரஸிக தேசம் தான்.

“இத்தேசம், அழகு நிரம்பிய ஒரு பெண்ணணங்கின் சரீரம் கேவலம் நோயினால் சாயை மர்த்திரமாய்த் தேய்ந்து விடுதல் போலச் சீர்கேடுற்றுவிட்டது. இதனைத் தற்காலத்து மக்கள் அனைவரும் நினைந்து நினைந்து அற்புதக் காதல் - சிந்தனையில் மூழ்கிக் கனவு காணுதற்குரிய ஓர் இடமாக அமைத்துவிட வல்லதாகும் இதன் இலக்கியம். இலக்கியம் ஒருவகை ரஸவாதம் என்பது உண்மையல்லவா? இனிமேல் என்றாவது பாரஸிக தேசம் மக்களுக்குக் கவிதையும் கதையுமாகிய புதிய மதுவை வார்த்துத் தரவல்லதா? இக் கேள்வி வேண்டாதது. வெகு காலத்திற்கு முன்னரே மதுக்கிண்ணம் ஒன்றை இத் தேசம் அளித்துள்ளது. இக் கிண்ணத்தில் உணர்ச்சி சுரந்து ததும்பிக் கொண்டிருக்கிறது. பாரஸிகம் உலகத்தில் அமைந்ததன் பயன் நிரம்பியாய் விட்டது.

“ஆனால், முற்காலத்தே உமாரின் புகழ்ச்சிக்குரியவர்களாய் விளங்கிய இப் பாரஸிக மக்கள் எப்பொழுதும் இன்பத்தை நாடி உணர்ச்சிச் சூழலிலே மூழ்கியிருந்தவர்கள் அல்லர். இப்பொழுது ஆப்கானிஸ்தானம் என்று வழங்குகிற தேசம் ப்ண்டைக் காலத்தில் பாக்டிரியா என்று அழைக்கப்பட்டது. உயர்ந்த மலைகள் செறிந்தது இந்தப் பிரதேசம். உழைத்து வாழ்தற் பொருட்டு இங்கிருந்து கீழே இறங்கிப்