பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாப் பாவலர்களும் வெறி கொண்ட பித்தர்களே என்பது ஒருபொது வழக்கு பாரசீகப் பாவலன் உமர்கயாம் ஒரு வாழ்க்கைப் பித்தன். வாழ்வின்பத்தை முற்றும் முழுமையாக நுகர்ந்ததின், வெளிப்பாடே இப் பாடல்கள். நாளை வாழ்வேன் என்பவள் அறிவிலி, இன்று வாழ எண்ணுவதுகூட காலங் கடந்த கருத்தே. நேற்றே வாழத் தொடங்கினவர் அழிவுடையர் என்பதே உமர்கயாமின் உண்மை உள்ளொளி. ‘புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து’ விளங்கும் புதிய கண்டெடுப்புகளைத் தமிழாக்கம் செய்கையில் இதனைச் செம்மை செய்தவர் என் அருமைத் தோழர் ம.இலெ. தங்கப்பா. அவர்க்கும் புதிய மொழியாக்கத்தை வரவேற்று நுகரும் இலக்கிய நேயர்கட்கும் என் நன்றி.

இந்த உலகில் உள்ள எவர்ககும்
உண்ணப் பாதி ஆப்பமும்
குந்தி வாழக் குடியிருக்க
வீடும் ஒன்று கொண்டவர்
இங்கு யார்க்கும் ஆண்டை அல்லர்
அடிமையரும் அல்லரே
‘என்றும் மகிழ்க’ என்றவர்க்குச்
சொல்க இன்ப வாழ்க்கையே.

அன்பன்
த. கோவேந்தன்