கற்றவரும் பண்பினோரும் ஆனோர் கவின் ஓங்கியோர்
உற்ற மேன்மையோர் குழாத்துள் உறுவிளக்காய் நின்றனர்.
பட்டப் பகலின் ஒளியில் அவர்கள் பாழ் இருட்டைத் தவிர்வரோ?
கட்டுக் கதைகள் கூறிவிட்டுக் கண்கள் முடிச் சென்றனர்.
முன்பிருந்து மறைந்தவர்கள் தம்மைத் தாமே மூடப்பொய்
நம்பிக்கையில் நாட்டம் வைத்து நானிலத்தில் புதைந்தனர்.
செல்லுவாய்நீ மது அருந்து, செப்பும் உண்மை கேட்டிடு,
சொன்ன அவர்கள் சொற்கள் யாவும் தொடர்பிலாத பொய்யடா.
தெளிவிலாதோர் வாழ்வின் பொருளைத் தேடித் தேடி உழன்றனர்
கிளியைப் போல வாழ்வைப் பற்றிக் கிளைகிளயாய்க் கிளத்தினர்;
உலகின் உண்மை அறிகிலாது செருக்கி உரத்துப் பேசியோர்
சலிப்படைந்து தெளிவறிந்து சால அமைதி கொண்டனர்
விண்பரப்பின் காளைக் கோளும் வயமிருந்து சுழன்றிடும்
மண்பரப்பின் கீழிருந்து மற்றோர் காளை மறைந்துள
உண்மை காணக் கண்திறந்து பாரடா நீ பாரடா,
மீண்டும் பழமைக் கழுதைக் கூட்டம் இடையில் நிற்கக் காணலாம்!
15