பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைமை பொங்கும் காலம். இன்று வேனில் இன்பப் போதிதே
வளமை பொங்கும் மதுவை உண்பேன் வாழ்வின் ஆறுதல் அதே
பழிசொலாதீர் கசப்பென்றாலும், மதுவே எனக்கு இன்பமாம்
மது கசப்புத்தான் ஏன் என்றால் அதுவே என்றன் வாழ்க்கையே.


என் விருப்பம் படிநடப்பின் இங்கு நான்பிறந்திரேன்
என் விருப்பம் சாவென்றாலும் எப்படி நான் சாவதாம்?
நன்மை என்றே ஏதுமில்லை நலிந்த விடுதி ஈதடா.
வந்தும் என்ன? வாழ்ந்தும் என்ன? போயும் என்ன மேன்மையே?


வருகையாலும் போக்கினாலும் வாய்க்கும் நலன்கள் என்னவோ?
பெருகு வாழ்வாம் நெடிய நூலின் பின்னும் இழைகள் எங்கேயோ?
உருளும் புடவி வட்டத்தூடே உயர்ந்தவர்கள் பற்பலர்
எரியுமிழ்ந்தார்; சாம்பல் ஆனார்; புகையும் கூடஇல்லையே!


கோள்கள் என்னும் கூர்மிகுந்த வாளின் கொடிய வீச்சினால்
வீழ்ந்துபட்டு வற்றி வதங்கி விடுதல் இரங்கத் தக்கதே
வாழ்வில் ஆசை தீரு முன்னம், வருத்தம் இரக்கம் தருவதே
சூழும் சிறிய இமை நொடிக்குள் துடைத்தழிக்கப் படுவதே.