பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

பிற்பகல் நேரத்திலே, ஒருவேளை அவள் தன்னைத்தேடி விண்மீன் வீட்டுக்கு வந்திருக்கக்கூடும் என்று அவசர அவசரமாகக் கோபுரத்தை நோக்கி ஓடி விடுவான். அறைகளில் யாருமே இருக்க மாட்டார்கள். அவள் ஏன் வரவில்லை? நோயாகப் படுத்து விட்டாளோ? நோயாக இருந்தால் தகவல் சொல்லி விடலாமே! தகவல் சொல்லக்கூடிய அளவுக்கு மேல் நோய் வாட்டுகிறதோ என்னவோ? சேதியறிந்துவரச் சொல்வதற்கும் ஆள் இல்லை. வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளும்படி டுன்டுஷ் சொன்னபோது மறுத்துவிட்டது எவ்வளவு கெடுதல் ஆகிவிட்டது என்று தோன்றியது. யாராவது பெண்கள் இருந்தாலும் புத்தகக் கடைக்காரர் வீட்டுக்குப் போய் விசாரித்துக் கொண்டுவரச சொல்லலாம். அப்படியாரும் கிடையாது!

இவ்வாறு குழம்பியபடி, மசூதியை நோக்கிக் கடைத்தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, அம்மைத் தழும்புடன் கூடிய பழக்கமான ஒரு முகத்தைப் பார்க்க நேர்ந்தது.

சிறிது யோசித்துப் பார்த்ததும், புத்தகக்கடை வீதியில் தன்னைத் தொடர்ந்து உளவறிந்த பிச்சைக்காரன் அவன் என்பது நினைவுக்கு வந்ததது. அவனோ, உமாரைக் கண்டவுடன், ஒளிந்து கொள்வதற்காக விரைந்து நடக்கத் தொடங்கிவிட்டான் கவனிக்காதவன் போல.

உமார் விரைந்து சென்று, அவனுடைய தோளையழுத்திப் பிடித்துக் கொண்டான்.

“நீருற்றுக்குப் பக்கத்திலே என்னுடன் வந்து பேசிக் கொண்டிருப்பாளே; அவளை நீ பார்த்தாயா?” என்று ஆவலோடு கேட்டான், உமார்.

உமாரை உற்று விழித்துக் கொண்டே, “அவளை நான் பார்க்கவில்லையே! அவள் இங்கே இல்லையே போய்விட்டாளே!” என்று விட்டுவிட்டுச் சொன்னான்.

“போய் விட்டாளா? எங்கே?” என்று உமாரின் கேள்வியிலேயிருந்த ஆவலையும் அவசரத்தையும் அந்தப் பிச்சைக்காரன் கவனித்தான், யாருடைய முகத்தையும் பார்த்தவுடன் அவர்களுடைய மனவியல்பை எளிதாக அறிந்து