பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ஆள் அனுப்பி வரவழைத்தான். எல்லோரும் வீட்டுக்குள் நுழைவதை என் கண்களால் பார்த்தேன். நண்பர்களும் சுற்றத்தார்களும் கூடினார்கள். திருமண விருந்துச் சாப்பாடும் இனிய சர்பத்தும் எல்லோருக்கும் வழங்கினார்கள். எனக்கும் கூடக்கொஞ்சம் கிடைத்தது”

உமாருக்கோ, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “சரி, அவள் என்ன ஆனாள்?” என்று கேட்டான்.

“வேலைக்காரர்கள் பேசிக் கொண்டார்கள். அந்தப்பெண் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாளாம். எங்கேயோ வெளியிலிருந்து அவளை இரண்டுபேர் பிடித்துக் கொண்டு வந்தார்களாம். எங்கேயும் ஓடிப்போக முயற்சித்திருப்பாள். பிடிபட்டுவிட்டாள். எப்படியோ, அப்துல்சைத் என்ற துணி வியாபாரி அவள் அழகைக் கேள்விப்பட்டு, நல்லவிலை கொடுத்திருக்கிறான். அவனுக்கென்ன, எத்தனையோ கூடாரங்களுக்கும், குதிரைகளுக்கும் அதிபதி!” என்று பேசிக் கொண்டிருந்த பிச்சைக்காரன் நிறுத்திவிட்டுத் தன் கண்களை ஓடவிட்டான். ஏனெனில் உமார் ஓடினான்.

குருடனைப் போலக் கூட்டத்திலே இடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்தான் உமார். பித்து பிடித்தவன் போல் ஓடிய அவனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டுத் தன்கையில் இருந்த தங்க நாணயத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான் பிச்சைக்காரன். பக்கத்தில் இருந்த ஒரு கல்லில் உரசிப்பார்த்து, நல்ல மாற்று என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.

மூன்று நாளைக்கு முன்னால், யாஸ்மி உமாரைப்போய்ச் சந்திப்பதைப்பற்றி அவளுடைய சிற்றப்பனிடம் கோள் சொல்லியதற்காகக் கிடைத்த வெள்ளி நாணயங்களுடன் பொன்னையும் சேர்த்து வைத்துக் கொண்டான், அந்த அம்மைத் தழும்பு மூஞ்சிப் பிச்சைக்காரன். உமார், அப்துல்சைத் இவர்கள் இருவரிடம் கறப்பதைக் காட்டிலும் அந்தச் சிற்றப்பனிடம், அதிகப் பணம் கறப்பது எளிது என்று பிச்சைக்காரன் முதலில் எண்ணியிருந்தான். ஆனால், உமார் தங்க நாணயமாகவே கொடுத்ததும் அவன் புத்தியில் கொஞ்சம் சபலமுண்டாகியது. நேரே வட்டிக்கடைக்காரனிடம் சென்று, “தெருவிலே சுற்றித்திரியும் அந்த அனாதைப் பயலுக்கு நம்பிப்பணம்