பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

கற்றூண் அடியிலும், பூஸ்தான் நகரத்து ஒட்டக நிலையத்திலும் நெடுநேரம் உட்கார்ந்திருந்தான். ஒருமுறை அப்துல்சைத் என்ற ஒரு வணிகனைப் பின்தொடர்ந்து வடமலைத் தொடர்வரையிலும் சென்று, கடைசியாக அவன் போகாத சந்தையிலே பழைய துணிவிற்கின்ற ஒரு கந்தல் வியாபாரி என்பதைத் தெரிந்து கொண்டான்.

இடைவிடாத அவனுடைய உடல்வேதனை அவனை ஓரிடத்தில் கூடத்துங்க முடியாமல் செய்தது. சுமைகளுடன் நீண்டதுரம் போகும் ஒட்டகங்களுடன் கூடவிரைந்து ஓடும்போது, அவனுக்கு உடல் வேதனை குறைவாகத் தோன்றியது. “யாஸ்மி என்ன வேதனைப்படுவாளோ? ஓர் அடிமையைப்போல விற்கப்பட்டு, ஓர் அடிமையைப் போலவே அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் அவளுடைய உள்ளம் எவ்வளவு துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும்? அன்றைக்கு அடித்த அடியில் அவள் எவ்வளவு துடித்துப் போயிருப்பாள். இப்பொழுது எந்த இடத்திலே, எந்தப் பாதையிலே சென்று கொண்டிருக்கிறாளோ? உன்னுடன்கூட இருப்பதைக் காட்டிலும் வேறு வாழ்வு எனக்குக் கிடையாது என்றாளே!” என்று நினைக்க நினைக்க அவன் உள்ளம் வேதனையால் வெடித்துவிடும் போல் இருந்தது. நாட்கள் வாரங்களாயின வாரங்கள் மாதங்களாயின.

இளவேனிற் காலத்தின் சிலுசிலுப்பைக் கோடைகாலத்துச் சூரியன் உறிஞ்சிவிட்டது. குழகுழவென்று இருந்த சேறுஞ்சகதியும் இறுகிய இரும்பு வார்ப்புப்போல கட்டித் தன்மையடைந்து விட்டது. பச்சைப்புல் தரைகள் பழுப்பு நிறமடைந்தன.

கோடை வெயிலின் கொடுமையும், இடைவிடாத அலைச்சலின் அயர்ச்சியும் சேர்த்து அவனை நோயில் கிடத்திவிட்டன. காய்ச்சலும் சள்ளைக்கடுப்பும் சேர்ந்து இரண்டு வாரங்கள்வரை அவனைப் படுத்த படுக்கையாகக் கிடத்திவிட்டன இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவன் எழுந்திருக்க முடிந்தபோது, அவனுடைய கால்களைத் தரையில் ஊன்றுவதற்குப் போதிய வலிவுகூட இல்லாதவனாக இருந்தான், மீஷித் நகரத்தைச் சேர்ந்த கருணையுள்ளம் படைத்த ஒருவன், அவனைத் தன் கழுதையின்மேல் ஏற்றி நிசாப்பூரில் கொண்டுவந்து விடுவதாகக் கூறினான்.