பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

பெரும் பேராசிரியர்கள் கண்டுபிடித்த கருவிகளும், பாக்தாது நகரத்துக் கணிதப் பேராசிரியன் ஒருவனும், அறிஞர் அலிசென்னாவின் ஆராய்ச்சிகளின் பலனும், அனைத்தும் உமாரின் கையிலே இப்பொழுது சேர்ந்திருக்கின்றன. இருப்பினும் அவன் அதனால் கர்வமடையவில்லை.

வேகமாக உள்ளே நுழைந்த டுன்டுஷ் “அடேயப்பா! மிருக ராஜ்யத்திலிருந்து வந்த முனிபுங்கவர் மாதிரியிருக்கிறாயே! உன்னை எங்கெங்கே தேடுவது? நெருப்புப்போல பறக்கும் நிசாம் அவர்களின் கோபத்தை நீ எப்படித் தவிர்க்கப் போகிறாய்? என்ன பதில் சொல்லப் போகிறாய்? சரி, சரி இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தாயே, அதுவே பெரிது!” என்றான்.

“நான் வெளியேறிச் சென்றிருந்தபோது, யாஸ்மி எதாவது செய்தி அல்லது அடையாளம் அனுப்பியிருந்தாளா?” என்று உமார் அவனை வினவினான்.

ஒற்றர்களின் தலைவனான அந்த டுன்டுஷ் விழிக் கோணத்தாலேயே சிரித்தபடி, “ஓ அந்தப் பெண்ணா, அவளைப்பற்றி நான் ஒன்றும் கேள்விப்படவில்லையே!” என்றான்.

“உன்னுடைய ஆட்களுக்கு ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டுமே!”

டுன்டுஷ் தலையை அசைத்துக் கொண்டே, ‘ஊஹாம்! ஒரு தகவலும் இல்லை. என்னுடைய ஆட்கள் எவ்வளவோ முயற்சிசெய்து தேடிப்பார்த்தார்கள் பயனில்லை. நீ ஏன் இதற்காக இத்தனை கவலைப்படுகின்றாய்? அவள் போய்விட்டால் இந்த உலகத்திலே பெண்களே இல்லாமலா போய்விட்டார்கள்? பாரசீகத்துப் பைங்கிளிகளும் சீனத்துச் சிங்காரிகளும் எத்தனையோ பெண்கள் அடிமைச் சந்தையிலே இருக்கின்றார்கள். எடுப்பும் அழகும் வாய்ந்த ஒருத்தியை எளிதில் தேர்ந்தெடுத்து உன்னுடையவள் ஆக்கிக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய ஏற்பாட்டை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால், நிசாம் இப்பொழுது கோபமாக இருக்கிறார். அவரைச் சமாதானப் படுத்துவதற்கு ஏதாவது இங்கு வேலை நடந்ததாக நீ காண்பித்துக் கொள்ள வேண்டும். அவர் எதிரிலே ஏதாவது ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். என்ன செய்யப் போகிறாய்?” என்று டுன்டுஷ் உமாரைக் குடைந்தான்.