பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

“அவன் கேட்டபடியே காலம் அளக்கும் கருவியை அமைத்துக் கொடுப்போம். ஆனால், அவன் ஏன் அப்படி அலைந்து சுற்றிக் கொண்டிருந்தான்!” என்று நிசாம் கேட்டார்.

“அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் ! தங்கள் அடியவனுக்கு எதுவும் தெரியாது!” என்று உள்ளத்தை மறைக்கும் ஒரு புன்சிரிப்புடன் டுன்டுஷ் கூறினான்.

“அவன் மறுபடியும் சுற்றியலையாமல் பார்த்துக் கொள்வதை உன் வேலையாக வைத்துக் கொள். அவன் இங்கேயிருக்க வேண்டியது இன்றியமையாதது” என்று ஆணையிட்டு, அவனுக்கு விடைகொடுத்தார் நிசாம்.

தன் வீட்டுக்குச் சென்ற டுன்டுஷ் அங்கிருந்து ஓரிடத்திற்குச் சென்றான். அந்த இடம் ஒரு பழைய கிட்டங்கி. அது கடைத் தெருவை நோக்கிக் கொண்டிருந்தது. தான் மறைந்து கொள்வதற்காகவும், தன் வசம் கிடைத்த பிறர் பார்க்கக் கூடாத பொருள்களை மறைத்து வைப்பதற்காகவும் அந்தக் கிட்டங்கியை அவன் பயன்படுத்தி வந்தான். எகிப்திய ஊமையொருவன் அதைக் காவல் புரிவதற்காக வைக்கப்பட்டிருந்தான். அவன், தானே அந்தக் கிட்டங்கிக்கு உரிமையாளன்போல நடித்து வந்தான். அங்கே சென்ற டுன்டுஷ், ஒரு மூலையிலேயிருந்த பெட்டகத்தின் மூன்று பூட்டுக்களையும் திறந்து உள்ளேயிருந்து ஒரு பொருளையெடுத்தான். நீலக்கல் பதித்த ஒரு சோடி வெள்ளி வளையலே அது. அந்த வளையலை ஒரு கூனன் கொண்டு வந்து கொடுத்தாள். அவன், இறந்துபோன சுல்தானின் அன்புக்குரிய விகடனாக இருந்தவன், மேற்குத் திசையில் அலப்போ நகரை நோக்கிச் செல்லும் சாலை வழியில், கொண்டு செல்லப்பட்ட யாஸ்மி என்ற பெண், அன்பின் அடையாளமாக உமார் என்பவனுக்கு அனுப்பிய பொருளே இந்த வளையல் என்று அந்தக் கூனன் கூறினான். இந்த வளையல் மட்டும் உமார் கையில் கிடைத்தால், அலெப்போ நகர் நோக்கிப் பறந்து விடுவான். பிறகு நிசாம் அவர்கள் பெருங் கோப்த்திற்குத் தான் ஆளாக நேரிடும். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த டுன்டுஷ், அந்த வளையல்களைத் தன் மடிக்குள்ளே எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு ஓர் ஊற்றுக்கிணற்றை நோக்கி வந்தான்.

யாரும் கவனியாத சமயம் பார்த்து, அந்த வளையல்களை கிணற்றுக்குள்ளே போட்டு விட்டுப் பட்படவென்று நடந்து அந்த இடத்தை விட்டுச் சென்றான்.