பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

பிடிக்கலாமல்லவா? இப்பொழுது அவள் எங்கிருந்தாலும், தேடிப்பிடித்து வரக்கூடிய நிலை அவனிடம் இருந்தது. பொருளும், ஆட்களும், அதிகாரமும், பலமிகுந்த சக்கரவர்த்தி ஒருவரின் பக்க பலமும் எல்லாம் அவனிடம் இருந்தன.

டுன்டுஷ், உமார் மேற்றிசை செல்வதன் நோக்கத்தை உடனே புரிந்து கொண்டான். யாஸ்மி என்ற அந்தச் சிறுமிக்காகத்தான் என்பது ஒற்றர் தலைவனாகிய அவனுக்கு எட்டாத விஷயமல்ல.

“இதே உமார், தப்பியோடியதற்காக என்னைக் கண்டித்தாயே, நாய் போல் அலையவிட்டாயே, கிழவா! இப்பொழுது, நீயே அவனை நழுவ விடப் போகிறாய்!” என்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துக் கொண்ட அவன், வெளியில் கேட்கும்படி, பணிவுடன் “எழுதியபடிதானே நடக்கும்” என்று ஒரு மத நம்பிக்கையுள்ளவனுடைய குரலில் கூறினான்.


19. அவமதிக்க வந்தவன் சவமாகிப் போனான்!

அலையடித்து நுரையடித்துப் பொங்கிச் சீறிக்கொண்டிருந்தது அந்த ஏபிரேட்ஸ் ஆறு. அந்த ஆற்றைக் கடப்பதற்காக அதன் கரையிலேயிருந்த பாழடைந்த பாபிலோன் நகரத்தின் ஒரு பகுதியிலே சுல்தானின் படைகள் காத்துக் கொண்டிருந்தன. சுல்தானைத் தொடர்ந்து உமாரும் பிரபுக்களும் பேரீச்சம் பழக்காடுகளைக் கடந்து அந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கட்டிடங்கள் இடிந்து குவிந்து கிடந்த கற்களும், மணற் குன்றுகளும் காட்சியளித்தன. அழிந்துபோன அந்தக் குட்டிச் சுவர்களின் ஊடே சுற்றிக் கொண்டிருந்தான் உமார். வேட்டையாடாத நேரத்திலே, நடனங்களும் கண்கட்டு வித்தைகளும் காண்பதிலே சுல்தானுக்கு விருப்பம் அதிகம்.

பாழடைந்து போன ஒரு ராஜசபா மண்டபத்திலே சுற்றிலும் வண்ணத் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டன. பளிங்குப் படிகக் கற்களின் மேலே விரிப்புகள் விரிக்கப் பட்டன. அரசனுக்கும் அந்தக் கேளிக்கைக்காரர்களுக்கும், அரங்கம் அமைக்கப்பட்டது. இதிலே தினமும் நடனங்களும், வித்தைகளும் நடைபெற்றன. ஒரு நாள் மாலை உமாரும் அங்கு அழைக்கப்பட்டான்.