பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

திருப்ப என்னென்ன செய்தார்களென்று எண்ணிப் பார்த்து, அதையெல்லாம் தானும் செய்து பார்த்தாள். ஆனால் அவனோ, அவள் நழுவ விட்ட பூவை எடுத்து, அவள் மடியிலே போட்டுவிட்டுப் போய் விடுவான். அவளுக்கோ வெட்கம், பயம், அதிகப் பிரசங்கித்தனமாகச் செய்து விட்டோமே என்ற எண்ணம் எல்லாம் உண்டாகிவிடும். யார் கண்ணுக்கும் தெரியாமல் மணிக்கணக்கில் போய் ஒளிந்துகொண்டு விடுவாள். தன் தாயாருடைய வெண்கலக் கண்ணாடியிலே, அடிக்கடி முகம் பார்த்துக் கொண்டு தான் மிக அழகாக இருப்பதாக முடிவு செய்து கொள்ளுவாள். பெரிய பெண்ணாகவும், கவர்ச்சியும், அழகும் பொருந்தியவளாகவும் இருக்கும் தன்னை ஓர் இளவரசி என்றே எண்ணிப்.பல மனிதர்கள் தேடி வருவதாகக் கற்பனை செய்து கொள்வாள். வீட்டுப் பெண்மணிகள் மூலையில் உள்ள கட்டிலில் உறங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு தாங்களும் தூங்கி விடுவார்கள். இவளோ தன் பூனைக் குட்டியிடம் தன் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பாள். இப்ராஹீம் மகன் தன்னோடு பேசமாட்டானா என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.

இப்ராஹீமின் பிள்ளை தங்கள், புத்தகக் கடைக்கு வரும்பொழுது அவனுடைய ஒவ்வொரு செய்கையையும், யாஸ்மி, உற்றுக் கவனித்தாள்.

வெளிச்சம் தெரியும் இடமாகத் தேர்ந்து அவன் உட்கார்ந்து கொள்வதும், எப்படிப்பட்ட புத்தகங்களை விருப்பத்தோடு எடுத்துப் படிக்கிறானென்பதும் எப்படி விரல்களால் வரியாகத் தடவிப் படிக்கிறானென்பதும் அவள் கவனித்தாள். அவன் எப்பொழுதும் விரும்பிப் படிக்கும் புத்தகம் இருந்தது. யாஸ்மி மட்டுமே கடையில் தனியாக இருந்தபோது அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் அதில் பலப் பல படங்கள் இருந்தன. ஆனால் அவை யாவும், வட்டங்களாகவும் கோடுகளாகவும் விசித்திர கட்டங்களாகவும் வெட்டுப்பட்ட கோணங்களாகவும் இருந்தன. அது ஒரு ஷேத் (சேத்)திர கணித புத்தகம். அவள் படித்தறிந்து கொள்ள முடியா விட்டாலும் அதன் அடையாளம் அவளுக்கு நன்றாகத்தெரியும். அவள், அதை வேறு பல