பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

“நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் வானசாஸ்திரியாரே, என்னுடைய இந்த நாய்களின் ஆட்டத்தையும் கொஞ்சம் பாரும்” என்று சுல்தான் அவனை அமர்ந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

இரத்தினக் கம்பளத்திலே, உமாருக்காக ஓரிடம் ஒதுக்கிக் கொடுக்கப் பெற்றது. அவன் எதிரே, நடனக்காரர்கள் சுழன்று சுழன்று வந்தார்கள், வேடிக்கைக் காரர்களின் தலைவன் தானே ஓர் இசை கருவி போலக் காட்சியளித்தான். அவனுடைய இடுப்பிலே பிணைத்துக் கட்டப் பட்டிருந்த ஒரு முரசத்தில் அவனுடைய விரல்கள் ஒலியெழுப்பின. அதே சமயத்தில் அவனுடைய தோள்களில் கட்டப்பட்டிருந்த சிறு மணிகள் குலுங்கி இசைத்தன. அவன் சுழன்று ஆடும்போது அவனுடைய தலைமுடியவிழ்ந்து சுழன்றது.

ஆடிக் கொண்டிருந்த அந்தக் கேளிக்கைக் காரர்களின் தலைவன் சட்டென்று நின்று, உமாரின் எதிரிலே மண்டியிட்டுத் தன் கையை நீட்டி வெகுமதி கேட்டான். அவிழ்ந்து முன் தொங்கிய முடிக்கற்றையின் ஊடாக அவனுடைய விழிகள் உமாரைக் கூர்ந்து நோக்கின. உமாரும் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, தன் விரல் நுனியில் வைத்துக் கொண்டே, ஒரு நாணயத்தை வெகு திறமையாகச் சுண்டிச் சுண்டிச் சுழற்றி விட்டான்.

“கண்கட்டு வித்தையில் தேர்ந்த கலைஞரே! இது என்ன பிரமாதம்! வானத்துப் பனிக்கட்டிகளை (ஆலங்கட்டிகளை) கீழே வரவழைப்பேன். மணற்புயலையும் எழுப்பி வீசச் செய்வேன்! இன்னும் உங்கள் எண்ணத்தில் இருப்பதையும் எடுத்துரைப்பேன்!”

அவன் தன்னை ஆபத்தில் மாட்டிவிட முயலுகிறான் என்பதை யறியாத உமார் “அப்படியானால், நீ பெரிய வித்தைக்காரன்தான்!” என்றான்.

“வானநூற்கலைஞரே நான் ஒரு மோசமான அயோக்கியன் என்று தாங்கள் எண்ணுகிறீர்கள். இருப்பினும் எனக்குப் பயப்படுகிறீர்கள்!” என்றான். அவனுடைய கூரிய பார்வை உமாரின் மேலேயே பதிந்திருந்தது. சுல்தானுக்கு இது ஒரு வேடிக்கையாக இருந்தது. ஆவலுடன் அவனைக் கவனித்தார்.