பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

“வானநூற்கலைஞரே! என் மனத்தில் இருப்பதைத் தாங்கள் கூறுங்கள்! தங்களால் முடியவில்லை என்றால் பரவாயில்லை. முடியாது என்று சொல்லி விட்டால் போதும்!” என்றான். அவனுடைய பரந்த தலையை யாட்டிக் கொண்டே, “எங்கே, நான் எந்த வாசல் வழியாகப் போகப் போகிறேன். சொல்லுங்கள் பார்க்கலாம்! கிழக்கா, வடக்கா, மேற்கா அல்லது தெற்கா? எது வழியே நான் வெளியேறப் போகிறேன். தீர்க்கதரிசியாரே! சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றான் அவன். அது உமாருக்கு ஒரு சவால் போலவே இருந்தது!

உமாருக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது. ஒருவன் வெளியே செல்வதையும் விண்மீனையும் சம்மந்தப்படுத்துகின்ற பேதைமையை எண்ண எண்ணச் சிரிப்புதான் வந்தது. ஆனால் அவன் சிரிக்கவில்லை. காரணம் மாலிக்ஷா அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரோ, இந்த மாதிரி விஷயங்களிலே நம்பிக்கையுள்ளவர். கத்திச் சண்டைக்குத் தயாராக இருக்கும் வீரர்களைப் பார்க்கும் அதே ஆர்வத்தோடு, அவர் உமாரையும், நாடகத் தலைவனையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

“இது மிகச் சாதாரண விஷயம்..” என்று இழுத்தான் உமார். “மக்கள் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் பெருந் திறமை வாய்ந்தவர் என்று. அப்படிப்பட்டவர் ஏன் பின் வாங்குகிறீர்கள். இப்பொழுது நான் எந்த வாசல், வழியாகப் போவேன் என்று சொல்லுங்கள், பார்ப்போம்!” என்றான் அவன்.

மற்ற ஆட்டக் காரர்களும் அவனைச் சுற்றிலும் வந்து நின்று கொண்டார்கள். சுல்தானுடைய ஆட்கள், நெருங்கி வந்து நின்று கொண்டார்கள், நன்றாகக் கேட்பதற்காக. மாலிக்ஷா உமாரின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். நட்சத்திரங்களை ஆராய்வதற்கும் இந்த மாதிரி சம்பந்தமும் இல்லை என்று சொல்ல எண்ணினான் உமார். ஆனால், வாய் திறக்க வரவில்லை. உதடுகள் அசையவில்லை.

சுல்தானோ, அந்த மனிதன் எண்ணுவதைத் தன்னால் சொல்ல முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறார். எந்தக் காரணம் காட்டி எவ்வளவு விளக்கினாலும், மாலிக்ஷாவின் மூட நம்பிக்கையைப் போக்குவது முடியாத காரியம் என்பதை உணர்ந்து கொண்டான் உமார்.
உ.க. 9