பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

இந்த ஆட்டக்காரன் தன்னைக் கவிழ்த்து விட வேலை செய்கிறானென்பதை, நெடுநேரத்திற்குப் பிறகு அவன் புரிந்து கொண்டான். இந்தச் சூழ்ச்சியைத் தகர்க்கத் தன்னுடைய புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்தியே வெற்றி காண முடியும் என்று முடிவு கட்டினான்.

“பேனாவும் தாளும் கொண்டு வாருங்கள்” என்று உமார் கட்டளையிட்டான்.

அரசரின் செயலாளர் ஒருவர், அவன் முன் வந்து மண்டியிட்டு ஒரு சிறு காகிதச் சுருளும், சிறகு பேனாவும் கொடுத்துவிட்டு போனார். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால்தான் பாராட முடியும் என்ற எண்ணத்துடன் அவற்றை வாங்கிக் கொண்டான் உமார். அரசரின் வானசாஸ்திரியின் கடமை இதுதான் போலும் என்று எண்ணிக்கொண்டே, யோசித்தான். தான்சொல்லுவது தவறாகிவிட்டால் மாலிக்ஷா மதிக்கவும் மாட்டார், இந்த நிகழ்ச்சியை மறக்கவும் மாட்டார். சொல்லுவது மட்டும் சரியாக இருந்துவிட்டால்...? நான்கு கதவுகள், கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு... ஏதோ முடிவுக்கு வந்து, தாளில் என்னவோ சில சொற்களை எழுதி முடித்தான் உமார். தாளை மடித்தான், எழுந்தான், மாலிக்ஷாவின் அனுமதியுடன் முன் நடந்து, படிக்கட்டுகளின் பக்கத்திலேயிருந்த பளிங்குக் கல்லின் மேலேயிருந்த படிவத்தின் கீழே அதைச் செருகி வைத்துவிட்டு மீண்டும் தானிருந்த இடத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஆட்டக்காரனைப் பார்த்து, “இனிமேல் நீ போகலாம்!” என்றான்.

ஆட்டக்காரனின் கண்கள் ஒளி வீசின. தன் சூழ்ச்சி பலிக்கப் போகிறதென்ற எண்ணத்திலே அவன் உள்ளம் பூரித்தது. முன்னுக்குச் சில அடிகள் நடந்து வந்தவன், கீழ்த்திசை வாசலை நோக்கி ஓடினான். அவன் தோள் மணிகள் குலுங்கியொலித்தன. பிறகு, வெற்றிக் குரல் எழுப்பிக் கொண்டே, பக்கத்திலேயிருந்த சுவரை நோக்கிப் பாய்ந்தான். பூவேலையுடன் தொங்கிய திரைச் சீலையைத் தூக்கிச் சுற்றியபடி, சுவரின் நடுவில் இருந்த சிறு கதவைத் திறந்து கொண்டே “இந்த வழியாக நான் வெளியே பாகிறேன்!” என்று சொல்லி விட்டுப் போனான். அவன் சென்றதும், தூக்கிய திரைச்சீலை கீழே விழுந்தது.