பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கையெழுத்துப் பிரதி, புத்தகங்களின் ஊடே மறைத்து வைத்தாள். அன்றைக்கு அவள் மிகக் கவர்ச்சியாகத் தோற்றமளித்தாள். ரஹீமும், இப்ராஹீம் மகனும் உள்ளே, நுழைந்தவுடன், ரஹீம் அவளைப் பார்த்து “யாஸ்மி அடேயப்பா! உன் அழகுக்கு முழு நிலவு ஈடாகுமா? இல்லை அந்த இன்பபுரி இளவரசிதான் இணையாவாளா?” என்று கேட்டான். இனிமையான அந்த வருணனையைக் கேட்டதும் யாஸ்மி தன் புருவத்தை உயர்த்தி மலர்ந்த பார்வையால் அவனை நோக்கினாள். “வெட்டும் அந்தப் பார்வையைத் தடுக்கும் கேடயம் என்னிடம் இல்லை. கருணை காட்டு” என்று ரஹீம் சிரித்தான்.

யாஸ்மியும் புன்சிரிப்புக் காட்டினாள். அவளுடைய பார்வை முழுவதும், இப்ராஹீமின் மகன் புத்தகத்தைத் தேடுவதையே கவனித்துக் கொண்டிருந்தது. கையெழுத்துப் பிரதிகளைக் கலைத்துத் தேடுவதுபோல் பாவனை செய்து, யாஸ்மி அந்த சிவப்புப் புத்தகத்தை எடுத்தாள். அப்படி எடுக்கும்போது அதில் ஒரு பக்கம் குறுக்குவாட்டில் கிழிந்து போய் விட்டது. அதே சமயத்தில் அவளுடைய தந்தை உள்ளேயே வந்து கொண்டிருந்தார். நல்ல வேளையாக, அது கிழியும் சமயத்தில் அவர் பார்க்கவில்லை. என்றாலும் உள்ளே வந்ததும், புத்தகத்தைப் பார்த்தவர், அது, கிழிந்து போயிருப்பதைக் கவனித்து விட்டார். தன்னைக் கடிந்து கொள்ளப் போகிறாரே என்று யாஸ்மி பயந்து நெஞ்சு படபடக்கத் துடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான்தான் தவறுதலாகக் கிழித்து விட்டேன், அதை, நானே வாங்க முடிவுகட்டி விட்டப்படியால் நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. விலை என்ன? என்று கேட்டான் இப்ராஹீம் மகன்

“எவ்வளவு நல்லவன்!” என்று வியந்தது, யாஸ்மியின் இளம் உள்ளம். விளக்கப் படங்களுடன் கூடிய இந்தக், கோண கணிதப் புத்தகத்தை இவன் எப்படி வாங்க முடியும் என்று வியப்படைந்தார். இப்ராஹீம் மகனிடம் அதை வாங்கப் போதுமான பணமில்லை, என்பது அவருக்கு மட்டுமல்ல ரஹீமுக்கும் தெரியும். அது மிக விலை உயர்ந்த கையெழுத்துப் பிரதியாகும்.