பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று சொல்லியபடியே குதிரையின் சேணத்து மிதியை நடுங்கும் தன் கைகளினால் பிடித்துக் கொண்டான். “இரண்டு வருடம் பத்து மாதங்களாகத் தங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

உமார் அந்தக் கூனனுடைய ஆவல் நிறைந்த முகத்தை உற்றுப் பார்த்தான். முன் ஒரு நாள் நள்ளிரவிலே, ஒரு குளத்திற்குள்ளே நிலவு முழுகிக் கொண்டிருப்பதைக் கண்டு அழுது கொண்டிருந்த அந்தக் கூணன், பழைய சுல்தானுடைய விகடன் என்ற விவரங்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று கூட இருந்த வெள்ளைக் கழுதையை விட்டுப் பிரிந்து கிழிந்த கந்தலாடையுடுத்திப் பிச்சைக்காரனாகத் திரியும் அந்தக் கூனனைக் கண்டு வியந்தபடி, “ஜபாராக்” என்று கூவினான்.

“ஜபாரக்! ஏன் இப்படி ஏழைகளுக்கும் சாமியார்களுக்கும் இடையே கிடந்து அவதிப்படுகிறாய்? எனக்குச் சொல்லியனுப்பக்கூடாதா?” என்று உமார் கேட்டான்.

“சொல்லி அனுப்புவதா? நான்தான் தங்கள் வீட்டுக்கு வெள்ளி வளையல்களைக் கொண்டு வந்தேனே! தங்களைப் பார்க்க முடியவில்லை. பிறகு அலெப்பா நகருக்கு வந்தேன். ஒவ்வொரு பிறையாகத் தாங்கள் வருவீர்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். முதலில் அவளுக்குத் தங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் அதிகமாக இருந்தது. தங்களை நினைத்து அடிக்கடி பைத்தியம் போல் சிரிப்பாள். தங்கள் வீட்டுக்கே அவளை அழைத்துக்கொண்டு வரலாமென்று எண்ணினேன். ஆனால், ஓர் அழகான பெண்ணோடு முழு முட்டாளான நான் வழிப் பயணம் செய்வது ஆபத்தென்று பட்டது. எங்களிடம் பணமும் இல்லை. நீங்கள் எப்படியும் வந்து விடுவீர்கள் என்றே அவள் சொல்லிக் கொண்டிருப்பாள். தாங்கள் அவளை மறந்து விட்டீர்களா? யாஸ்மியைப் பற்றிய நினைப்பே இல்லையா? என்று கூனன் கேட்டதும், உமார் அவனுடைய மெலிந்த கைகளைப் பிடித்துக் கொண்டு, “இங்கே யிருக்கிறாளா? இப்பொழுது இருக்கிறாளா?” என்று படபடப்புடன் கேட்டான்.

ஜபாரக் என்ற அந்தக் கூனன், தன் கையிடுக்கில் வைத்திருந்த அந்த ரொட்டியைக் காட்டி, “நான் பிச்சையெடுத்து