பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

இனிய கேக்குகளும், அரிசிக் கூழும் இனிப்பான ஷெல்லிப் பழங்களும், சிவந்த திராட்சை மதுவும் மற்ற பொருள்களும் வாங்கி வா. இந்தத் தெருவில் உள்ள மக்களையெல்லாம், மணவிழாவில் பங்கெடுத்துக் கொள்ளும்படி அழைத்து வா! குழல் ஊதுபவன் ஒருவனையும், மெழுகுவர்த்திகளையும் கொண்டுவர மறந்து விடாதே!” என்று கூறிவிட்டு, குதிரையைத் திருப்பிக் கொண்டு சென்றான். அதிசயத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டு, ஏந்திய கைகளுடன் நின்ற பிச்சைக் காரர்களைக் கவனிக்க அவனுக்கு அப்போது நேரமில்லை.

சாக்கு முட்டை நிறையச் சாமான்களுடன் வந்த ஜபாரக் வழி நெடுகிலும், “நம்பிக்கையுள்ளவர்களே! ஓ! மத நம்பிக்கை உள்ளவர்களே! திருவிழாக் கதவு திறந்திருக்கிறது! எல்லோரும் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்துக் கொண்டே வந்தான்.

திருமணச் சடங்கு தொடங்கியது. முக்காடுடன் ஒரு மூலையிலே இருக்கும் யாஸ்மியைப் பற்றியே உமார் நினைத்துக் கொண்டிருந்தான். அவனருகிலே விரிப்பில் உட்கார்ந்திருந்த காதியின் கர கரத்த குரல் கேட்டது. “புத்தக வியாபாரி ஒருவரின் மகள். சரி, அவள் வரதட்சணையாக என்ன தருகிறாள்? அதாவது அவள் உனக்கு என்ன சொத்து தரப் போகிறாள் என்று கேட்கிறேன்” என்று காதி திரும்பத் திரும்பக் கேட்டார்.

நீதிபதியின் பின்னால், ஒரு குறிப்பெடுக்கும் எழுத்தாளர், திருமண ஒப்பந்தத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்.

“சொத்துத்தானே! புயற்காற்றைப் போன்ற கருத்த கூந்தலும், பூங்கொடி போன்ற அவளுடைய மெல்லிய இடையும், காதல் ஒன்றைத் தவிர வேறு எதையும் அறியாத அவள் இதயமும், இவை போதுமே! வேறு சொத்து எதுவும் அவள் தர வேண்டியதில்லை. விரைவில் மணத்தை முடியுங்கள்!” என்றான் உமார்.

“விலைமதிப்புள்ள பொருள் எதுவும் இல்லை என்று எழுது” என்று குறிப்புக்காரனிடம் கூறிவிட்டு உமாரை நோக்கி, “தாங்கள் அவள் பெயரில் என்ன சொத்துக்களை எழுதி வைக்கப் போகிறீர்கள்?” என்று காதி கேட்டார். அவன் சொன்னதைக் கேட்டதும் அவருக்கு சிரிப்புதான் வந்தது. “என்னிடம் இருக்கும்