பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

அமீர் அஜீஸ் என்ற உமாரின் நண்பனிடமிருந்து, தற்சமயத்திற்காக வாங்கப்பட்ட பல்லக்கு அது. அதற்குக் காவலுக்கு இரண்டு வீரர்களையும் அமீர் அஜீஸ் அனுப்பியிருந்தார்.

“என் அருமை மணப் பெண்ணே! இனி நீ என்றென்றும் என்னுடைய கைகளிலேயே இருப்பாய்!” என்று அவள் காதில் மட்டும் விழும்படியாக உமார் கூறினான்.

பாதுகாப்பு வீரர்கள் பல்லக்குத் திரைகளை இழுத்து மூடினார்கள். அதுவரையில் அனாதையாகக் கிடந்த யாஸ்மியோடு ஒன்றாக வாழ்ந்த பிச்சைக் காரர்கள் எல்லாரும் விலகி வழிவிட்டார்கள்.

“அல்லாவின் புகழ் நிலைப்பதாக! பொன் நாணயங்களை அள்ளி வழங்கும் அருளாளன்; அறிவாளன் புகழ் ஓங்குவதாக!” “கூடாரமடிப்பவன் புகழ் வளர்வதாக!” என்று வாழ்த்தினார்கள்.

“இந்த மணமக்கள் வாழ்வில் இன்பம் நிறைவதாக!” என்று கூவினார்கள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்த ஒரு சிறுமி தன் கையில் இருந்த கூடையில் நிறைந்திருந்த ரோஜாப்பூ இதழ்களை உமாரின் குதிரையின் மீது கொட்டினாள்.

“தலைவரே! நாங்கள் எங்கு செல்ல வேண்டும்? கட்டளைக்குக் காத்திருக்கிறோம்!” என்று வீரன் ஒருவன் கேட்டான்.

“அங்காடிச் சந்தைக்கு செல்” என்று ஆணையிட்டான் உமார்.

“அங்காடி இந்நேரம் மூடப்பட்டிருக்குமே? பிற்பகல் தொழுகைக்குப் பிறகு அடைத்துவிடுவது வழக்கமாயிற்றே!”

“இருக்கட்டும்! நீ அங்கே செல்! விரைந்து செல்!” என்று மீண்டும் கூறினான் உமார்.

கரிய நிறமுடைய அடிமைகள் பல்லக்கைத் தூக்கினார்கள். பல்லக்கு நகர்ந்தது. அதன் பக்கத்திலேயே குதிரையை மெல்ல நகர்த்திக் கொண்டு சென்றான் உமார். பாதுகாப்பு வீரர்களும் உடன் நடந்தார்கள். அந்த வீரர்களில் ஒருவன் ஜபாரக்கிடம் மெதுவாக, “உங்கள் தலைவர் குடி மயக்கத்தில் இருக்கிறாரோ?” என்று கேட்டான்.