பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

முகாமிட்டது. மிதப்புத் தோணி மீண்டும் ஆற்றைக் கடந்து செல்லத் தொடங்கியது. புதிய மனிதர்கள் தங்கள் குதிரைகளை நீர் குடிப்பதற்காக ஆற்றுக்குக் கொண்டு வந்தார்கள்.

“இல்லை, இது பிளேக் நோய் அல்ல. இவருக்குக் காய்ச்சலேயில்லை. நோய் இவர் உடம்பிலே இல்லை; மனதிலேதான் இருக்கிறது. இவ்வளவு தூரம் கவலைப் படுவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது இவருக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். தங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று அருகிலிருந்த யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஜபாரக் கேட்டான்.

அப்பொழுது இன்னொரு மனிதன் அருகிலே வந்தான். உமாரின் கையில் ஒரு கனத்த குவளையைக் கொடுத்தான். அதிலே இரத்தம் போல் சிவந்த நிறமுடைய திராட்சை மதுவை ஊற்றினான். “ஆற்று நீர் நல்லதல்ல; இது மிக மிக நல்லது. குடியுங்கள்” என்று கூறினான். அந்தக் குரல் எங்கோ முன்பு கேட்ட குரல் போல் இருந்தது. ஆம்! அது வியாபாரி அக்ரோனோஸின் குரல்தான். அக்ரோனோஸின் கை, குவளையைப் பிடித்து உமாரின் உதட்டருகிலே நகர்த்தியது. உமார் சிறிது குடித்தான். இப்படியே குவளை காலியாகும் வரை குடித்தான். அவன் குடிக்கக் குடிக்க அக்ரோனோஸ் ஊற்றிக்கொண்டேயிருந்தான். அவன் ஊற்ற ஊற்ற உமார் குடித்துக் கொண்டே யிருந்தான்.

பிறகு இன்னும் சிறிது குடித்தான். அந்த மது கெட்டியாகவும் நல்ல மணம் பொருந்தியதாகவும் இருந்தது. உமாரின் மூளையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தணித்தது.


25. எழுதினபடிதான் எதுவும் நடக்கும்!

கொரசான் பாதையிலே, கூர்டிஸ்தான் மலைப்பிரதேசத்தின் வழியாக அந்த ஒட்டச்சாரி சென்று கொண்டிருந்தது. ஒட்டகங்களின் மணியோசை இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பயணம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. கதிரவனின் வெப்பத்துடன், மண்ணிலிருந்து கிளம்பிய குடும் ஆட்களை அயரச் செய்து