பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கூட்டங்களை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். திடீரென்று அவனுக்குக் கொட்டாவி வந்தது. விளக்குகளை அணைத்து விட்டுக் காலையும் கையையும் நீட்டிப் படுத்தான். மறுகணம் அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.


3. முக்காட்டுச் சிறைக்குள்ளே மூடி வைத்த கட்டழகி!

பள்ளி வாசலிலிருந்து புறப்பட்ட வீதியின் மறுகோடியிலே ஒரு பூங்காவனம் இருந்தது. அதில் திராட்சைக் கொடிகள் அடர்ந்து, படர்ந்து கூடாரம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நல்ல நிழல், கொஞ்ச தூரத்தில் வீதி திரும்பும் இடத்திலே ஒரு பெரிய மரமும், நீருற்று ஒன்றும் இருந்தன. இந்த நீர் ஊற்றிலேதான், நிஜாப்பூர் பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். வரும்பொழுது அந்த மரத்தடி நிழலிலே குளு குளுவென்று வீசும் காற்றிலே உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவதும் உண்டு. உமார் இங்கேதான் கால், முகம் கழுவுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் வருவது வழக்கம்.

ஒருநாள் யாஸ்மியின் தாயார் அவளைத் தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்படி அங்கே அனுப்பினாள். ஜாடியில் தண்ணீர் மொண்டு கொண்டு அதைத் தலையிலே தூக்கி வைப்பதற்காக யாஸ்மி முயற்சித்துக் கொண்டிருக்கும் போது உமார் தண்ணீர் குடிப்பதற்காக வந்து சேர்ந்தான். வழக்கத்திற்கு மாறாக அவன் கையில் எந்தவிதமான புத்தகமும் இல்லை. அவன் கூட யாரும் நண்பர்களும் இல்லை. தன்னந்தனியாக வந்திருந்தான்.

தண்ணீர் குடித்தவுடன் உமார் போய் விடுவானோ என்று நினைத்த யாஸ்மி அவனிடம் பேச்சுக்கொடுக்கத் தொடங்கினான்.

“விதண்டாவாதம் பேசுகிறவன் என்று உன்னைப்பற்றி அப்பா சொன்னார். நீ ஏன் இப்படிக் கெட்டுப் போகிறாய்?” என்று யாஸ்மி கேட்டாள்.

திடீரென்று பேசக் கற்றுக் கொண்ட பச்சைக் கிளியொன்றைப் பார்ப்பது போல் உமார் அவளைப் பார்த்தான். யாஸ்மி மேலும் பேசத் தொடங்கினாள். அவனைத் திருத்தி நல்லவழிக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ‘எதற்காக விதண்டாவாதம் பேசி பள்ளிக்கூட ஆசிரியர்களைக் கேலி செய்து கெட்டபெயர் எடுக்க வேண்டும்?