பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அனுபவப்பட்ட அக்ரோனோஸ் வருத்தத்துடன் பேசினான்.

“நம் பாக்தாத் சகோதரர்கள் கூர்டியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தின்பதற்குரிய பறவையைப் பிடித்துச் சிறகுகளைப் பிய்த்தெரிந்து விட்டு உடலைக் கொண்டுபோனது போல வியாபாரிகளைக் கொண்டு போய்விட்டார்கள். வேகமாக ஓடும் குதிரைகளைப் பெற்றிருந்தவர்கள் சிலர் மட்டும் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் பிடிபட்டிருக்கிறார்கள். இனி அவர்களை விலைகொடுத்துதான் திரும்ப மீட்கவேண்டும். அவர்களோடு வந்த வீரர்கள் அவர்களைக் காக்கப் பயன்படவில்லை. பாவம், கூர்டியர்களின் அடிமைகளாகி விட்டார்கள் அருமை சகோதரர்கள்!” என்று வருந்தினான்.

அந்த வியாபாரிகள் கூட்டத்தோடு தான் செல்வதை அவர்கள் மறுத்தபோது அக்ரோனோஸ் தான் மட்டும் பின் தங்கிவிட்டான். ஆனால், தன்னுடைய பட்டுத் துணி முட்டைகளைச் சுமந்து வந்த ஒட்டகங்களை அந்தக் கூட்டத்தோடேயே அனுப்பி வைத்திருந்தான். அவையெல்லாம் கொள்ளையிலே போய்விட்டான, ஆனால், அவன் தப்பிப் பிழைத்தானே, அந்த வரையிலே சந்தோஷந்தான்.

மது வியாபாரி, பெருமூச்சு விட்டுக்கொண்டே, “உம்! எழுதியபடி நடந்து விட்டது” என்றான்.

ஆனால், உமார் சிரித்தான். மேலும் உரக்கச் சிரித்தான். “நம்மிடம் அருமையான மது இருக்கிறது. அந்த வியாபாரிகள் இழந்த சொத்துக்கள் முழுவதும் சேர்த்தால்கூட இந்த மதுவின் மதிப்பில் பாதிக்குக்கூடச் சமமாகாது. தெரியுமா! ஹி!...” என்று உரக்கச் சிரித்தான்.

அங்கு குந்தியிருந்த ஆட்களையும் நாய்களையும் தங்களுடன் கூட்டிக்கொண்டு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். ஓரிடத்திலும் தங்காமல், வேகமாகத் தங்கள் ஒட்டகங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும் செலுத்திக்கொண்டு சென்றார்கள். கூர்டியர்கள் மறுபடியும் வந்து தாக்கக்கூடும் என்று பயப்பட்டதால், அன்று இரவு எங்கும் தங்காமல், தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒளி வீசி ஒளிவீசி ஓய்ந்து காணப்பட்ட பழைய கிழவியான அந்த நிலவின்