பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வந்து குதிரையைச் செலுத்திக் கொண்டே பேசினான். “மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ஜபாரக் யாஸ்மியிடமிருந்து ஓர் அடையாளம் கொண்டு வந்தானாமே அதை மறந்து விட்டீர்களா?” என்று கேட்டான்.

உமார் தன் குதிரையை நிறுத்தி, அவர்களை நோக்கினான்.

“தலைவரே! நான்செய்தி தெரிவித்து விட்டு வந்தபிறகு கூட, மாதக் கணக்காக தாங்கள் தேடி வரவில்லையே, காரணம் என்னவென்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் ஜபாரக்.

“என்ன அடையாளப் பொருள்? என்ன செய்தி?”

“நீலக்கல் பதித்த வெள்ளி வளையல் ஒன்று கொண்டு வந்தேன். யாஸ்மி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மேற்குத் திசையில் உள்ள அலெப்போ நகருக்குக் கொண்டு செல்லப் படுகிறாள் என்ற செய்தியைக் கொண்டு வந்தேன்.”

யாஸ்மியின் கைகளில், தான் அந்த வளையல்களை அணிவித்தது உமாருக்கு நன்றாக நினைவு இருந்தது. அந்த நினைவு வந்ததும், குதிரையின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தான்.

“எனக்குத் தெரியாது. நீ யாருடன் பேசினாய். வேலைக்காரனுடனா அல்லது பேராசிரியர் குவாஜா மைமனிடமா” என்று உமார் கேட்டான்.

“இல்லை, அவன் பெயர் எனக்குத் தெரியாது. பருமனாக இருந்தான். மணி போன்ற குரல், வானத்தையொத்த நீல நிறத் தலைப்பாகை அணிந்திருந்தான். நான் தகவல் சொல்லத் தொடங்கும் முன்பாகவே, “யாஸ்மிக்கு நோயாமே? என்று கேட்டான்” என்று ஜபாரக் சொல்லிக் கொண்டு, வரும்போதே, “நிறுத்து அவன்தான் டுன்டுஷ் என்னை ஏமாற்றிவிட்டான். என்னிடம் பொய் சொல்லியிருக்கிறான்” என்று வெறிபிடித்தவன் போல் கூவினான். பிறகு எதுவுமே பேசாமல் இருந்தான். பிரயாணம் தொடர்ந்து நடந்தது. ஜபாரக்கும் அக்ரோனோசும் பின் தங்கிச் செல்லும்போது, “உனக்கு இதனால் என்ன இலாபம்? இதனால் என்ன பயன், வீணாக, அவருக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும்படி செய்து விட்டாயே!” என்றான்.