பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பிறரோடு இனிமையாகப் பேசி நல்லவன் என்று பெயரெடுக்கக் கூடாதோ?’ என்று கேட்டுவிட்டு, “உன் வயதென்ன? பள்ளிக் கூடத்தில் படிக்காதபோதும் ரஹீமுடன் சுற்றாமல் இருக்கும்போதும், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டாள்.

“எனக்குப் பதினேழு வயதாகிறது. என் தந்தை கூடாரமடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர். சில சமயம் நான் அவருடைய கடைக்குச் செல்வேன். இப்பொழுது அவர் இறந்துவிட்டார், ரஹீம்தான் துணையாக இருக்கிறான்”, என்று உமார் சொன்னான்.

ஒரு பாறையின் மீது போய் உட்கார்ந்து கொண்டு யாஸ்மி அவனையும் அதில் வந்து உட்காரச் சொன்னாள்.

வேலையே ஒன்றும் பார்க்கவேண்டியதில்லாத நேரத்திலே நீ என்ன செய்வாய்? என்ன செய்ய விரும்புவாய்?” என்று கேட்டாள். அவன் தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணித்தான், அவள் அவ்வாறு கேட்டாள். அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டு உமார் சொன்னான் “ஓர் ஆராய்ச்சிகூடம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்றான். அது என்னவோ யாஸ்மிக்குப் புரியாத விஷயமாக இருந்தது, அப்புறம்...? என்றாள்.

“நட்சத்திர வட்டம் காட்டும்கோளம், டோலமி என்பவருடைய நட்சத்திரக் கணிதம் இதெல்லாம் வேண்டும்”: என்றான் உமார். ஆராய்ச்சிக்கூடம் என்றால் இன்னும் என்னென்ன வேண்டுமோ? தன்னுடைய இன்பக் கனவு போல, உமாருக்கும். ஏதோ இலட்சியக் கனவு இருக்கிறது என்பதை மட்டும் யாஸ்மி உணர்ந்து கொண்டாள். தான் எப்படி அமீரின் அரண்மனையிலே, வெள்ளிய அன்னம் மிதக்கும் தெள்ளிய நீர்த்தடாகங்களை உள்ளத்திலே எண்ணியிருந்தாளோ அதுபோல உமாரும் ஏதோ ஒரு இலட்சியத்துடன்தான் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. “தெரியும் தெரியும். நட்சத்திரங்களைக் கணக்கிட்டு விதியையறிந்து சொல்லுகிற சிதி அகமது போல நீயும் ஒரு சோதிடனாக விரும்புகிறாய். அதுதானே!” என்று யாஸ்மி கேட்டாள்.

சிதி அகமது என்பவன் பெரிய சோதிடப்புலி என்று பெரிய பெண்கள் பேசிக் கொள்வதை யாஸ்மி கேள்விப்பட்டிருந்தாள்.