பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


“ஆம்! அந்த நிலையான தவறு இங்கேதான் இருக்கிறது!” என்று மறுபடியும் உமார் கூறினான்.

“அது எப்படி இருக்க முடியும் அப்படிப்பட்ட பெரிய ஆராய்ச்சியாளர் தவறு செய்வாரா? இருக்க முடியாது!” என்றான் மைமன்.

இரவு முழுவதும் விழித்து அயர்ந்த கண்களில் சிந்தனையின் அறிகுறியைக் காட்டியபடி மைமனை நோக்கி உமார் கூறினான்.” அந்தத் தவறு எப்படி நேர்ந்தது என்பது தெரிந்தால் நாம் அவரையே திருத்தலாம். ஆனால், அலெக்சாண்டரியாவைச் சேர்ந்த அந்த மனிதன் புதைகுழியில் போய் வெகு நாட்களாகி விட்டனவே!”

அந்தக் கிழட்டுப் பேராசிரியன் உமாரின் இந்தக் கூற்றை நம்பவில்லை. இஸ்லாமிய விஞ்ஞானிகளால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரப்படும் டோலமி அட்டவணையைத் தவறு என்று சொன்னால், நிசாப்பூர் மசூதியின் தூண்கள் ஆடி விழுந்துவிடும், உலகமே அழிந்து விடும் என்பது திண்ணம்.

“நாம் இவ்வளவு நாளும் செய்த ஆராய்ச்சிகள் வீணானவை, பயனற்றவை. பேராசிரியர் காரெஸ்மியின் உழைப்பும், மற்றவர்களின் பணியும் வீணானவை. நம்முடைய குறிப்புக்களே தவறானவை, பொய்யானவை” என்று திரும்பத் திரும்பக் கூறினான். அவன் மூளை குழம்பியது. தரையே உயரக் கிளம்பினாலும் அவன் ஆச்சரியப் படமாட்டான். ஆனால் டோலமியின் அட்டவணை தவறு என்பதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் உமாரின் கரிய கண்களிலே உறுதியான பார்வையிருந்தது.

“மைமன், கொஞ்சம் பொறு. தவறு சாதாரணமானது தான். ஆனால் நிலையானது. முதல் குறிப்பிலும் தவறு இருக்கிறது. கடைசிக் குறிப்பிலும் தவறு இருக்கிறது. நீயோ, உண்மையான குறிப்புகளையே எடுத்துக் கணக்குச் செய்து போட்டிருக்கிறாய். ஆனால் அது தவறாக இருக்கிறது. உண்மையே தவறாக இருக்க முடியாது. ஆனால் அந்த இடத்திலே அப்படித் தோற்றமளிக்கிறது. இந்த இரகசியத்தை முடியிருக்கும் முக்காட்டைக் கிழித்து எறிந்து விட்டோமானால், பயன் கிடைக்கும்.”