பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

தலையுடனும், ராஜநடை போட்டு வந்த மைமன் அவர்கள் எதிரே நின்று கொண்டு கம்பீரமாகப் பேசினான்.

“சிறுவர்களே! பேராசிரியர் குவாஜா உமார் அவர்களும், நானும் சேர்ந்து ஒரு பிழையைக் கண்டு பிடித்தோம். பூமி சாஸ்திர நிபுணராகிய அறிஞர் டோலமியின் நட்சத்திர அட்டவணையில் தொளாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு பிழையை நான் கண்டு பிடித்தேன். இன்னும் சிறிது காலத்தில் நாங்கள் அதனைத் திருத்தி அமைத்து விடுவோம். இப்பொழுது மிக அலுப்பாக இருக்கிறது. நான் தூங்கச் செல்கிறேன்” என்று கூறிவிட்டுத் தன் மேல் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு தன்னுடைய பகுதிக்குச் சென்றான்.

தன்னுடைய பெருமையை அவர்கள் அறியும்படி சொல்லிவிட்ட மகிழ்ச்சியிலே அவன் இருந்தான்.

அவன் அகன்ற பிறகு சிறிது நேரம் அந்த உதவியாட்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு அவர்களிலே ஒருவன் “யா அல்லா இல்லல்லா! இந்தக் கிழடும் அவரோடு சேர்ந்து குடிகாரனாக மாறிவிட்டதே!” என்று சொல்லி வருத்தப்பட்டான்.


27. பழைய மது! புதிய கிண்ணம்!

ஆராய்ச்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த பளிங்குத் தூணின் நிழலைக் கொண்டு, குர்யோதயத்தையும் மறைவையும் நீர்க்கடிகாரத்தின் உதவியால் கணக்கிடுவதும், அவற்றைக் குறித்துவைப்பதும் தவிர வேறு வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.

உமார் மட்டும், தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தான். முதலில் நூல் நிலையத்திலிருந்து அறிஞர் டோலமியின் பூமிநூல் புத்தகம் ஒன்றை வாங்கிவரச் சொன்னான். பிறகு, முற்காலத்தில் இருந்த கிரேக்க விஞ்ஞானிகளின் பட்டியல் ஒன்று தயாரித்துக்கொண்டு வரும்படி கூறினான்.

பெரும்பாலும், அமைதியாக உட்கார்ந்து, அவன் வேலையைக் கவனித்து வந்தான். மேசையில் நிறையத்