பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

கூறி வருகிறார்கள். மத விரோதியான ஒரு கிரேக்கனுடைய அட்டவணையை நாம் உபயோகிக்கிறோம் என்று தெரிந்தால் என்ன சொல்லுவார்களோ, என்ன செய்வார்களோ? பொறுத்திருந்து, எல்லா வேலைகளும் பூர்த்தியான பிறகு, முதலில் நம் ஆராய்ச்சியின் பலனை சுல்தான் முன்னிலையில் சமர்ப்பிப்போம். அதுவரை எதுவும் பேசக்கூடாது” என்றான் உமார்.

“உண்மைதான்! ஒருமுறை மதவெறி பிடித்தவர்கள் சிலர் நம்முடைய கோபுரத்தின்மேல் எரிகிற தீவட்டியைத் தூக்கி எறிந்தார்கள். தாங்கள் அலெப்போவில் இருந்த சமயம், நிழற்குறிகாட்டும் பளிங்குக் கம்பத்தின்மேல் கற்களை வீசியெறிந்தார்கள். மசூதியிலிருந்து கூட்டங் கூட்டமாக வந்த அவர்கள் செய்த அட்டகாசங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது இந்த விஷயங்களையறிந்தால், மதவாதிகள் என்ன செய்வார்களோ, சொல்ல முடியாது, நம் சிந்தனை முடிவுகளைச் சிறிது காலத்திற்கு முத்திரையிட்டு மூடிவைக்க வேண்டியதுதான். உதடுகளுக்கும் பூட்டுப்போட்டு வைக்க வேண்டியதுதான்” என்றான்.

உமார் திடீரென்று புதுப்புது வேலைகளில் ஈடுபடுவதன் இரகசியமும் மைமனுக்குப் புரியவில்லை. ஆராய்ச்சி வேலையிலிருந்து சிந்தனை அதை மறந்து வேறு எங்கோ தாவுவதன் காரணமும் அவனுக்குப் புரியவில்லை, தூரத்திலே உள்ள ஊரிலே, ஓர் அழகிய இளம்பெண் அழுது வாடுவதும், உமாரின் தோளிலே தொத்திக்கொள்வதும், தோற்றமளிக்கும் போது உமார் தன் இருப்பிடத்தையும் வேலையையும் எல்லாவற்றையும் மறந்து விடுவான். யாஸ்மியின் நினைவு வந்ததும் பித்துப் பிடித்தவன் போல் மாறிவிடுவான். இது மைமனுக்குத் தெரியாத விஷயம்!

பெருக்கெடுத்தோடும் ஆற்றின் அருகிலே எரிக்கும் வெயில் ரேன் நரகத்தைப்போல் தோன்றிய் அந்தக் கூடாரம் அவன் நினைவுக்கு வரும். சில சமயம் பிரகாசமான கண்களுடன் கூந்தல் கற்றை ஆடி அசைந்துவரப் புன்சிரிப்புடன் துள்ளி ஓடிவரும் யாஸ்மியின் அழகுருவம் தோன்றும். இப்படி மாறி மாறி இன்பக்காட்சிகளும் துன்பத் தோற்றமும் தோன்றுமாயினும், பெரும்பாலும், அவளுடைய நோய் வலியும், மரண வேதனையும்தான் அடிக்கடி தோற்றமளிக்கும்.