பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

`

19

விடுவாள். இருவரும் ஒன்றாக இருப்பதைப் போல் இன்பமான வாழ்வு வேறு எதுவும் உண்டா? அவளுடைய பெண் உள்ளத்திலே வேறு எவ்விதமான கனவுதான் தோன்ற முடியும்? நெஞ்சில் நிறைந்த அன்பனை நீங்காமல் சேர்ந்திருப்பதுதானே எந்தப் பெண்ணும், எதிர்பார்க்கும் இன்பமாக இருக்கிறது! அவளுக்கு வீட்டுக்குப் போக வேண்டுமே என்ற எண்ணம் தோன்றவேயில்லை. அப்படியே உமாரின் அருகிலேயேயிருந்து, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவன் அங்க அசைவுகளையும், முக பாவத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களையும் பார்த்துக் கொண்டேயிருந்து விடலாம் போலிருந்தது. அவனைப் பிரிந்து அவளால் வாழ முடியுமா என்ற ஐயமே யாஸ்மியின் உள்ளத்தில் உருவாகிவிட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்திலே அந்த உமார் இல்லாத உலகம் வெறும் வெட்ட வெளியாய் பாலைவனமாய் வேண்டாத வெயிலாய் ஒன்றும் இல்லாத தன்மையாய்த் தோன்றியது. உமாருடன் இருப்பதைத் தவிர வேறு எதிலும் வாழ்வோ, இன்பமோ இல்லையென்று தோன்றியது. அவனுக்குச் சற்று நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். தான் சூடுவதற்காக யாஸ்மி பறித்து வைத்திருந்த ஒரு ரோஜாப்பூவை எடுத்து நீட்டி, “இது உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

உமார், அதை வாங்கி நுகர்ந்து பார்த்துவிட்டு, “இது உன்னுடையதல்லவா? நீயே வைத்துக் கொள்” என்றான்.

“இல்லை, அதை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். நீ அதை வைத்துக் கொள்கிறாயா?” என்று யாஸ்மி கேட்டாள். ஒருமுறை அவளுடைய அக்காள் தன்வீட்டு மாடியிலிருந்து ரோஜாப் பூவைக் கீழே போட்டாள். அவளை காதலித்த பாக்தாது நகரத்து இளைஞன் ஒருவன் அதை வாங்கித்தன் நெஞ்சில் பொருத்திக் கொண்டாள். அதுபோல உமாரும் செய்வானென்று யாஸ்மி எதிர்பார்த்தாள். ஆனால் உமாரின் மனமோ, பிறைக் கணக்கு மாதத்தைப் பற்றியும், பற்பல விஷயங்களைப் பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. கையிலிருந்த ரோஜாவை நோக்கிக் கொண்டிருந்த கண்களிலே அதன் உருவம் தெரியவில்லை, வேறு எவை எவையோ தோன்றி மறைந்து கொண்டிருந்தன. எங்கோ போய்க் கொண்டிருந்த உமாரின் உள்ளத்தை யாஸ்மி இந்த உலகத்திற்கு இழுத்து வந்தாள்.