பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அவன் அமைக்கப் போகும் ஆராய்ச்சிக்கூடம் ஏதோ பெரிய கோட்டைக் கோபுரத்தைப் போன்றது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

“நீ ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றாள் யாஸ்மி.

உமார் புன்சிரிப்புடன் “யாஸ்மி உனக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டான்.

“கிட்டத்தட்டப் பதின்மூன்றாகிறது” என்று யாஸ்மி மெல்லியகுரலில் சொன்னாள். பதின்மூன்று வயதாகிவிட்டால் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளத் தகுதியுடையவளாகி விடுவாள் என்று தன் தாயும் மற்ற பெண் மணிகளும் பேசிக் கொண்டது அவள் நினைவுக்கு வந்தது.

உனக்குப் பதின்மூன்று வயது நிறையும் பொழுது உனக்கு நான் நிறைய ரோஜாப் பூக்கள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, உமார் எழுந்து நடந்து விட்டான். அப்படி நடந்து போகும்போது அந்தச் சிறுமியிடம் எப்படி நான் இந்த மாதிரிச் சொல்லி விட்டேன் என்று நினைத்துக் கொண்டான். வயது வந்த பெண்ணிடம் சொல்ல வேண்டிய சொற்களை அவளிடம் சொல்ல நேர்ந்துவிட்டதே என்று அபாசப்பட்டான்.

ஆனால், யாஸ்மி அசையாத சிலைபோல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தாள். அவள் கண்களிலே ஆர்வஒளி நடமாடியது. அவள் உடலெங்கும் ஏதோ ஒரு இன்ப உணர்வு பரவியது. தன்னை மறந்து இவ்வளவு நேரமும் அசைவற்றிருந்த அவள் காதுகளில் கழுதைகளின் மணியோசை விழுந்தது. தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் உருவங்கள் தெரியத் தொடங்கின. இருந்தும், அவளுடைய இன்ப எண்ணங்கள் மாறுதலடையாமலே இருந்தன. “நீருற்றின் அருகிலேயே நேரத்தைக் கழிக்கிறாயே?” என்று சில பெண்கள் வந்து சுட்டிப் பேசியதும்தான் அவளுக்கு வீட்டு நினைப்பு வந்தது.

சிறிது நேரம் சென்றதும், யாஸ்மி ஏற்கெனவே ரோஜாப்பூப் பறித்த இடத்திற்குச் சென்று, மற்றொரு பூவைப் பறித்துக் கொண்டு தன்னுடைய பூனைக்குட்டியையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய படுக்கைக்குச் சென்றாள்.