பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


அங்கிருந்த அனைவருக்கும் அவன் நன்றாகத் தெரிந்தவனே . மிகுந்த புகழ்வாய்ந்தவனே என்பது அந்தக் கூட்டத்தினர் அனைவரும் மரியாதையுடன் அவனைத் திரும்பிப் பார்த்ததிலிருந்து தெரிய வந்தது. அரசரின் வானநூல் ஆராய்ச்சியாளராகிய நம் உமார்தான்!

அயீஷா அவனைக் கண்டதும், அவன் மிகுந்த அதிகாரமுள்ள அரசாங்கத்து உத்தியோகஸ்தன் என்று எண்ணினாள். அடத்தியான புருவங்களின் கீழே கழுகுப் பார்வையுடைய இரு கண்களும் கடுமையான முகமும் உடைய அவனுக்கு வயது சுமார் முப்பது இருக்கலாம். அயீஷா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே, எழுந்திருந்தாள்.

“ஏ, பெண்ணே! உட்கார். உன் முறை இன்னும் வரவில்லை!” என்று காவற்காரன் கடுமையாக அதட்டினான். ஆனால், அயீஷாவோ அவன் கைக்குக் கீழே குனிந்து திடீரென்று பாய்ந்து வழியில் இருந்த மனிதர்களை விலக்கிக்கொண்டு மருண்டோடும் மான்போல விரைந்தோடி அந்தக் குதிரை வீரனின் அருகிலே சென்று அவனுடைய குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டாள். “ஏழைகளின் பாதுகாவலனே! என்னைக் காப்பாற்றுங்கள் நான் பானு சாபா நகரத் தலைவனுடைய மகள். பாருங்கள் என்னை இந்தப் பொதுச் சந்தையிலே கொண்டு வந்து சாதாரண அடிமைச் சிறுவர் சிறுமிகளோடு ஏலம் போடுகிறார்கள். என்னைத் தாங்கள்தான் காத்து, அருள் புரிய வேண்டும்” என்று அடிபட்ட கிளிபோல விம்மினாள்.

தான் பேசிய அராபிய மொழியை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டுமே என்ற வேட்கையோடு அவனைப் பார்த்தாள். முக்காடு கீழே விலகி விழும்படி நழுவ விட்டாள். அவள் உதடுகள் அவனுடைய கருணைக்காக ஏங்கித் துடிதுடிப்போடு அசைந்தன. வேண்டுகோளும் உணர்ச்சியும் கலந்த அவளுடைய கரிய விழிகளை உமார் கண்டான். அவளுடைய அழகிய கழுத்தின் வளைவையும், மெல்லிய தோளின் சதைப் பிடிப்பையும் அளவிட்டான்.

உமார் அவளுடைய மொழியைப் புரிந்து கொண்டான். ஆனால், அந்தக் கன்னங்கரிய விழிகளைக் காணும் போது.