பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225


என்ற மன அமைதி ஏற்பட்டது. கடைசியில் பேரம் பேசுகையில் ஏதாவது தகராறு வந்து வேறு எவனுக்காவது விற்கப்பட்டு விடுவோமோ என்று கலவரத்தோடு பயந்திருந்தாள். அவள் முகந்தெரியும்படி திறந்திருந்த முக்காட்டை உமார் இழுத்து முடினான்.

அவள், மிகுந்த மரியாதையுடன் தலை குனிந்து கொடுத்தாள். இப்பொழுது, அவள் உமாரின் முழு உடைமையாகி விட்டாள். குதிரைகள் நடக்கத் தொடங்கிய பொழுது, பெருமிதத்துடன் திரும்பி அந்தக் கால் கொலுசு போட்ட அபிசீனியாக் காரியைப் பார்த்துக் கொண்டே சென்றாள் அயீஷா.

“பெண்ணே! நிஜமாகவே, நீ பானுசாபா நகரத் தலைவனுடைய மகள்தானா?” என்று உமார் திரும்பவும் கேட்டான்.

குழைவுடன், தன் பவழ உதடுகளிலே ஒரு சிறு குறுநகையைத் தவழவிட்டபடி அவள் நன்றியுள்ள நாயொன்று தன் தலைவனைப் பார்க்கும் வாஞ்சையுள்ள பார்வையுடன் கொஞ்சலாக உமாரை நோக்கி, “ஐயா, தங்கள் கருணையைப் பெறுவதற்காகப் பொய் கூறினேன். மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையாக நான் நன்றாகப் பாடுவேன்!” என்று விம்மும் குரலில் கூறினாள்.

உமார் ஒன்றும் பேசாமல் தனக்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

அழகிய இந்தச் சிறு பெண் நெஞ்சின் ஆழத்திலிருந்து உண்மை பேசுவதைக் கண்டு ஆனந்தங்கொள்ளும் மகிழ்ச்சிப் புன்னகை புரிந்தான். அதைக் கண்டு அழகி அயீஷாவின் மனம் ஆயிரம் முறை நன்றி கூறிக்கொண்டிருந்தது!

நிசாப்பூரிலிருந்து இரண்டு நாள் பயணம் செல்ல வேண்டிய தூரத்திலே, குன்றுப் பிரதேசத்திலே காசர் குச்சிக் அரண்மனை யிருந்தது. அந்த அரண்மனை மிகச் சிறியதாக இருந்தது. என்றாலும் அழகிய தோற்றத்துடன் விளங்கியது. ஒரு மலைத் தோட்டத்தின் நடுவிலே அமைக்கப் பட்டிருந்த அந்த அரண்மனையின் எதிரில் சமவெளி பரவிக் கிடந்தது. அழகிய