பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

“நீரூற்றுக்குப் பக்கத்திலே நேற்று முழுவதும் மீசை முளைக்காத ஒரு பையனோடு திரிந்து கொண்டிருந்தாள் உன்னுடைய யாஸ்மி! இனி அவளைவிட்டு வைக்கக்கூடாது. முக்காடு போட்டு முலையில் கிடத்த வேண்டியதுதான்!” என்று தன் வீட்டுப் பெண்மணிகளில் ஒருத்தி தன் தாயிடம் சொல்வதைக் கவனித்தாள் யாஸ்மி.

“இனிமேல், அவளைக் கடைக்கும் அனுப்பக் கூடாது!” என்று தாயார் சொன்னாள்.

யாஸ்மி ஒன்றும் பேசவில்லை. இது எதிர்பார்த்ததுதான் திருமணம் செய்யத் தகுந்தவள் என்பதற்கு அடையாளமாக முக்காடு தரப்போகிறார்கள் என்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. இனிமேல் யாரும் தன்னை அலட்சியப் படுத்த மாட்டார்கள் அல்லவா?

ஆனால், அவள் உமாரைப் பார்க்க முடியாதே! ஏன் பார்க்க முடியாது? எப்படியாவது பார்க்கத்தான் வேண்டும். நான்கு சுவர்களும் பலகணித் திரைகளுமா அன்பைத் தடுத்து நிறுத்திவிடும்? எப்படியும் உமாரைப் பார்ப்பேன், என்று யாஸ்மி உறுதி கொண்டாள்.

ஆனால், உமார் ஊரைவிட்டே போய்விட்டான்!


4. அறியாமல் சொன்ன ஆபத்தான சோதிடம்!

நிஜாப்பூருக்கு மேற்கே, கொராசான் பாதையில் ஓர் ஒட்டகச்சாரி போய்க் கொண்டிருந்தது. குதிரைப் படையொன்று அதைத் தொடர்ந்தது, நெடுந்துரப் பயணத்திற்குப் பிறகு, அவ்வழியில் மலைப்பாங்கான இடத்தில் உள்ள சத்திரம் ஒன்றில் அதன் பிரயாணிகள் தங்கினார்கள். முதல்நாள் இரவு, அங்கே யாரும் தூங்கவும் முடியவில்லை.

திறந்த வெளியில், முட்செடிகளின் சுப்பிகள் எரிந்து கொண்டிருந்தன. ஒட்டகங்கள் ஒருபுறம் அசைபோட்டுக் கொண்டிருந்தன. குதிரைகள் ஒருபுறம் புல்மேய்ந்து கொண்டிருந்தன. படையாட்கள் சோற்றுப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, கடைசிப் பருக்கையைக் கூட விடாமல் வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களைச் சுற்றி