பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


மெரில் நகரத்திலேயும், சுல்தானின் அரண்மனைக்கு அருகிலேயும் அரண்மனைகள் இருக்கின்றன. இவை தவிர, விஞ்ஞான ஆராய்ச்சிக்காக விண் மீன் வீடு என்ற ஆராய்ச்சி வீடு ஒன்றும் இருக்கிறது. அங்கே, தாடி நரைத்த பெரிய பெரிய படிப்பாளிகளிலெல்லாம் தன் தலைவருக்குக் கீழே வேலை செய்கிறார்கள். இவருடைய மேற்பார்வையில் அவர்கள் பெரிய பெரிய புத்தகங்களை உண்டாக்குகிறார்கள்” என்று கலெய்க்கா அபூர்வமாகச் சொன்னாள்.

“ஆ! என்ன, புத்தகங்களா!”

“ஆம்! புத்தகம் என்றால் நம் தலைவருக்குப் பேரீச்சம் பழம் மாதிரி மிகச் சாதாரணம்! அவ்வளவு இஷ்டம். சுல்தானுக்காக அவர் செய்த புத்தகங்களிலே ஒன்று அடையாள முறைக் கணிதம்.”

“அப்படி யென்றால்...?

“அடையாளமுறைக் கணிதம் என்றால் அது ஒரு மாயக் கணக்கு. மேலும், இதுவரை நடந்த விஷயங்களும், இனிமேல் நடக்கப்போகிற விஷயங்களும், ஆண்டவன் மனத்திலே இருக்கிற அத்தனை விஷயங்களும் அறிந்துசொல்லக்கூடிய அறிவு நம் தலைவருக்கு இருக்கிறது. முதிர்ந்த அனுபவமும் வயதும் உடைய உலக அமைப்பாளரான முதல் அமைச்சருக்கிருக்கக்கூடிய அத்தனை அதிகாரங்களும் நம் தலைவருக்கும் உண்டு! நம் சுல்தான் அவர்களுக்குப் படை வீரர்கள் என்றால் மிகப்பிரியம். அதற்கும் மேலாக அவர் விரும்புவது வேட்டையாடுவது. ஆனால், நம் தலைவரிடம் மிகமிக அதிகமான பிரியம் வைத்திருக்கிறார். ராஜாங்க விருந்துகளிலே, படைத் தலைவர்களுக்கும், மேலான இடத்தில் இவருக்கு இடங்கொடுத்துச் சிறப்புச் செய்கிறார்கள்.

போர் படையெடுப்பு, வேட்டை இவற்றிலே ஈடுபடும் மனிதர்கள் மிகுந்த தேகபலம் வாய்ந்தவர்களாயிருப்பார்கள். அவர்கள் பெண்களைத் தங்கள் பொழுது போக்குக்காகவும், பிள்ளை பெறுவதற்காகவுமே பயன்படுத்திக்கொள்வார்கள். அதிகாரம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு அழகான மனைவிகளும் அதிகமான மனைவிகளும் அந்த மனிதனிடம் நிறைந்திருப்பார்கள்!