பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

ஒவ்வொன்றாகக் கழட்டி எடுத்தாள். அப்படி ஒவ்வொன்றையும் கழட்டும்போதெல்லாம் வெடுக்கு வெடுக்கென்று திருப்பி உமாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். தன்னுடைய ஏகாந்த சிந்தைனையைத் தொடர்ந்து நடத்த முடியாத உமார், அவளுடைய செய்கைகளைக் கவனித்துக் கொண்டே இருந்தான். அயீஷாவினுடைய அந்த அழகான கைகள், கழட்டிய வளையல்களை, மடியில் கோபுரம் போல் அடுக்கிக் கொண்டிருந்தன. உயர்ந்து கொண்டே வந்த கோபுரம் திடுமென்று சரிந்து விழுந்து ஓசை எழும்பியது. துஷ்டத் தனமுள்ள குறும்புக்காரச் சிறுமி பதறுவது போல, அவள் மூச்சையிறுக்கிப் பிடித்துக் கொண்டாள். மெல்ல அவளுடைய தோள் உமாரின் உதட்டிலே உராய்ந்தது. பட்டுத் துணிக்குக் கீழேயிருந்த அந்தத் தோளின் கதகதப்பு அவனுடைய உதடுகளுக்கு உணர்வூட்டியது. எந்தப் பொருளையும் பார்க்க முடியாத அளவு இருள் சூழ்ந்திருந்தது அந்தச் சமயத்திலே.

உட்கார்ந்திருந்த அவள் தன் கைகளைத் தூக்கிக் கூந்தலைக் கோதிவிட்டுக் கொண்டாள். அவளுடைய உடலிலிருந்து கிளம்பிய மெல்லிய மணம் உமார் உணர்வில் கலக்கத் தொடங்கியது. அவள் எதுவுமே பேசாவிட்டாலும், அன்று இரவில் அந்த நேரத்தில் உமாருக்கு அவளே எல்லாமாக இருந்தாள். உலகத்தின் நினைவுகள் அனைத்தையும் மறந்து அவள் ஒருத்தியையே கருதும் நிலையில் அவன் இருந்தான். சிறிது நேரத்திற்கு முன் அவனுடைய சிந்தனை, பேச்சு அனைத்தும் முக்கியம் வாய்ந்த பெரிய விஷயங்களில் ஈடுபட்டிருந்தன. இப்பொழுதோ அந்தப் பெண்ணின் சிறு சிறு அங்க அசைவுகளே பெரிய விஷயமாகத் தோன்றின. அவனுடைய கைகள் அவளுடைய இடையைத் தொட்ட போது, அவை நடுங்கிக் கொண்டிருந்தன. தலையைக் கோதிக் கொண்டிருந்த தன் கைகளை இறக்காமலே, அவள் தலையை அவன் பக்கம் திருப்பினாள். அவனைப் பார்த்துக் குறுநகை காட்டினாள். அவளை முத்தமிடுவதற்காக அவன் குனிந்தான். அவள் வெடுக்கென்று நழுவிக் கொண்டு எழுந்தோடினாள்.

“அயீஷா !” என்று மெல்லிய குரலிலே அவன் அழைத்துக்கொண்டே அவளைத் தொடர்ந்தான். அவள் விண்மீன் வெளிச்சங்கூடத் தெரியாத மரநிழலுக்குள்ளே