பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

ஆரம்பித்துவிட்டது. அவளுடைய இதயம் வேகவேகமாக அடித்துக் கொண்டது. அப்படியே ஒருவருடன் ஒருவர் ஒன்றிக்கிடந்த அமைதியான நிலையில் அரைமணி நேரம் கழிந்தது. அதன் பிறகு, மனநிறைவு பெற்ற உமார், அவளுடைய இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

இப்படியே, அரை குறையான தன்வசமிழந்த நிலையில் கிடக்கும் இந்தப் பெண்ணைப்போல் வேறு ஒருபெண் இருந்ததில்லை; உமார் எத்தனையோ, ஆட்டக்காரப் பெண்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் இந்த அரபியப் பெண்ணைப்போல் அவனை நேசித்தவர்கள் யாருமில்லை!

அயீஷாவைப் பொறுத்த வரையில் இந்த மாய இரவு, அவளுடைய குணசித்திரத்தையே மாற்றியமைத்து விட்டது. உறவற்ற நிலையில் பேசாமல் அமைதியாக இருந்துவந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இந்தத் திடீர் மாறுதலால், அவள் ஒரு சிறு குழந்தைபோலத் தன் கைகளால் தாளம் போட்டுக்கொண்டு, இனிமையாகப் பாடத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டே, அவனுடைய கையைப்பிடித்து இழுத்துக் குளத்தில் குளிக்க வரும்படி கேட்டுக் கொண்டாள். அவள் தன்னுடைய கூந்தலை அள்ளி முடிந்து கொண்டிருக்கும் போது நட்சத்திர வெளிச்சத்தில் அவளுடைய மென்மையான உருவ அமைப்பையும் அதன் அழகையும் அவன் தெளிவாகக் காணமுடிந்தது. கதகதப்பாக இருந்த அந்த நீருக்குள்ளே அவனுடன் இறங்கிய அவள், மகிழ்ச்சியுடன் அவன்மேல் தண்ணீரை வாரியிறைத்தாள். அவள் அந்தக் குளத்திற்குள்ளே இறங்கியதும் அந்தக் குளமே உயிர்பெற்றது போல் இருந்தது. அந்த இரவும் - குளத்து நீரும் - ரோஜாப்பூக்களின் மணமும் எல்லாம் அவளுடையதாகி விட்டன. எல்லாம் அவளால் உயிர்பெற்றன.

“எத்தனை இன்பம் ஒ அல்லாவே! என் தலைவருடன் இருப்பதில் எத்தனை இன்பம்!” என்று மெதுவாகக் கூறினாள்.

ஆனால் கரையில் ஏறி, ஈரத்தைத் துடைத்துக் கொண்டு, உடையணிந்து கொண்டதும், அயீஷா ஏதோ ஒரு மாதிரியாக மாறிவிட்டாள். ஏதோ ஒன்றைக் கவனித்துப் பயந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறிக் கொண்டிருந்தாள்.