பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


வந்துவிட்டாயா? என்று சீறிக்கொண்டே, பக்கத்தில் இருந்த்வ்ன் கையில் இருந்த வாளை யுருவித் திருப்பிப் பிடித்துக்கொண்டு அவன் முதுகிலே, இரத்தக்காயம் ஏற்படும் வரை அடி அடியென்று அடித்து விட்டான். முக்கி முனகிக்கொண்டே, இஷாக் பொறுமையுடன் அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டான். ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் நேரத்தில் அவன் குறுக்கிட்டது தவறு என்பதை அவன் உணர்ந்தான். அவன் பொறுமைக்கு இது ஒரு காரணம். மற்றொரு காரணம், இப்பொழுது, அடிக்கிற தலைவர், ஒரேயடியாக அடித்துவிட்டால் பின்னால் தன்னை மன்னித்துத் தன் காலை வாங்கும்படி உத்தரவிட மாட்டார் அல்லவா? தங்களுடைய ஆயுதங்களை ஒளித்து மறைத்துக் கொண்ட மற்ற காவல்காரர்கள், இஷாக் நன்றாக அடிபடட்டும் என்று மகிழ்ச்சியடைந்தார்கள். இஷாக்கை அடிக்கிற நினைப்பில், தங்களை அடிப்பதை மறந்துவிடுவார் என்பது அவர்கள் எண்ணம். அவர் அடித்தாலும் கூடத் தாங்கள் வந்து பார்த்தது தங்கள் கடமை என்றும் சரியானதே யென்றும் நினைத்தார்கள். ஆனால், சொல்லவில்லை.

சிறிது நேரத்தில், தன் கத்தியைக் கீழே இறக்கிவிட்டுச் சிரித்தபடியே, “மூளையில்லாத மடையர்களே, இனிமேல் இந்தத் தோட்டமும் அந்தப்புரமாகிவிட்டது. ஆண்கள் யாரும் நுழையக்கூடாது. நினைவு வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

இஷாக் தன் உதட்டில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே, “தலைவரே, அப்படியானால், ஹீசேன், அலி, அகமது முதலிய தோட்டக்காரர்கள் என்ன செய்வது? தோட்டவேலை பார்க்க வேண்டுமே!” என்று நடுங்கியபடி கேட்டான்.

“அவர்கள் இல்லாமலே, தோட்டம் நன்றாக இருக்கும். அவர்களை குதிரை லாயத்தில் ஈயடிக்கச் சொல்லு” என்றான் உமார்.

அவர்கள் சென்று மறைந்தவுடன், தான் மறைந்திருந்த இடத்தைவிட்டு அயீஷா வெளியே வந்தாள். “உங்கள் வேலைக்காரர்கள் சோம்பேறிகளாயிருந்தது நல்லதாய்ப் போயிற்று. சுறுசுறுப்பானவர்களாயிருந்து, கொஞ்சம் முன்னதாகவே வந்திருந்தார்களானால்... என்று கூறிச்சிரித்தாள் அயீஷா.