பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

கேளிக்கைகளில் விருப்பங் கொண்டவன். மற்ற விஷயங்களில் அவன் விருப்புக் காட்டுவதே கிடையாது. ஆனால் இந்தப் போரழைப்பில் கலந்திருந்த ஏதோ ஒரு சக்தி அவனையும் இந்தப் போரில் கலந்து கொள்ளும்படி தூண்டியது. தூரமேற்குப் பிரதேசத்திலே, சுல்தான் ஆல்ப் அர்சலான் நடத்தப்போகும், அந்தப் போரிலே, மதவிரோதிகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அவன் கிளம்பி வந்திருந்தான். அவனுடன் அவனுடைய உயிர்த் தோழன், உமார் கூட வந்திருந்தான். ரஹீம், இரானிய பரம்பரையிலே வந்த பாரசீகப் பெருங்குடியைச் சேர்ந்தவன். அவன் குடிமரபு கிரேக்கர்கள் மரபினும் பழமையானது.

அவனிடம் குற்றமற்ற தன்மைகளும், நற்குணங்களும் நிறைந்திருந்தன. இருந்தாலும் இனிப்புக் கலந்த மதுவிலே விருப்பமுடையவன். சிறுவயதில் போலோ முதலிய விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும், பின்னால் அவன் விளையாட்டுக்களை அதிகமாக விரும்பவில்லை. அவனுக்குப் போர் கூட ஏதோ மான்களை வேட்டையாடுவது போலத் தான் தோன்றியது, கூட இருந்த ஒருவன், குளிர்தாங்க முடியவில்லையே என்று கூறினான். ரஹீமுக்கும் குளிராகத்தான் இருந்தது. கொட்டாவி வந்தது. ஆனால், அவனால் அமைதியாகத் தூங்கமுடியவில்லை. தோல்படுக்கைகளின் ஊடே, மூட்டைபூச்சிகள் வேறு புகுந்து கொண்டு அவனுக்குத் தொல்லை கொடுத்தன. சத்திரக்காரன் அவன் எதிரே வந்து நின்று கொண்டு போகாமல் அங்கேயே நின்றான்.

பேச்சுக் கொடுத்த பிறகுதான் அவன் அங்கேயே நின்று கொண்டிருப்பதன் காரணம் புரிந்தது. சத்திரத்துக்குப் பின்னாலேயுள்ள வீட்டில் சில பெண் பிரயாணிகள் வந்து தங்கியிருக்கிறார்களாம். அவர்களில் சில பெண்கள் பாக்தாதிலிருந்து வந்தவர்களாம், அழகிகளாம். இரவுப் பொழுதைச் சுவையாக்கும் பயிற்சி பெற்றவர்களாம். ரஹீம் இரவை இன்பமாகக் கழிக்க விரும்பினால் ஏற்பாடு செய்ய அவன் ஆயத்தமாக இருக்கிறானாம். இதுதான் விடுதிக்காரன் கூறிய செய்தி. ரஹீம் இந்த மாதிரி விஷயங்களில் பின்வாங்குவது கிடையாது. உடனே எழுந்து அங்குள்ள வேலைக்காரர்களை நோக்கி, உமார் வந்தால் தான் சில நண்பர்களைக் கண்டு பேசச் சென்றிருப்பதாகச் சொல்லும்படி கூறிவிட்டுக் சத்திரக்காரனைத் தொடர்ந்து சென்றான்.