பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

கொண்டே அடங்கிப்போனாள். அரண்மனையில் உள்ள அனைவருக்கும் இல்லத்தலைவருடைய இதயத்தரசி யாகிவிட்டாள் அயீஷா என்ற விஷயம் உணர்த்தப்பட்டது. எல்லோரும் அவளிடம் மரியாதையாக நடக்கத் தொடங்கினார்கள்.

மற்றவர்களுடைய விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடாமல் ஒதுங்கிப்போகும் அவளுடைய தன்மை உமாருக்கு மிகப் பிடித்திருந்தது. அவன் அங்கே இருந்தால் தான், அவளுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் அடைகிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட உமார், அவள் தன்னிடம் கொண்டிருக்கும் அளவற்ற அன்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். அவளுடைய மெல்லிய கழுத்தின் ஒவ்வொரு வளைவையும், அவளுடைய உடலின் ஒவ்வொரு நெளிவு சுளிவுகளையும் தெரிந்து வைத்திருந்த உமாருக்கு, அவள் உள்ளத்தின் உள்ளே என்ன இருக்கிறதென்றுமட்டும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய பக்கத்திலே படுத்துக்கொண்டு கண்களை அரைப்பார்வையாக முடிக்கொண்டு, அவன் மூச்சுடன் தன் மூச்சைக் கலந்து விட்டுக் கொண்டு இருக்கும் அவள், எங்கோ தூரத்திலே, அவன் காதுகளுக்கு எட்டாத எதையோ கவனித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கும்.

அவன் அவளைப்பார்த்து அதிசயப் படும்படியாகவே எப்பொழுதும் அவள் நடந்துகொள்வாள், அவனை ஒருநாள், அமைதியாக, “என்னுடைய அந்தப்புரத்துக்குக் காவலாள் வைக்க வேண்டுமென்று தாங்கள் எண்ணுகிறீர்களா?” என்று கேட்டாள்.

“இல்லை” என்று மறுத்தான்.

“இதோ அங்கே நடைபாதையில் ஒருவன் உட்கார்ந்திருக்கிறானே!” என்றாள். இஸ்லாமியக் கனவான்கள் வீடுகளிலே, அந்தப்புரத்திற்குக் காவலாள் வைப்பது வழக்கமென்றும் அது ஒருவகையில் நல்லதுதானென்றும் அவள் அறிவாள். இருந்தாலும் நாள் முழுவதும் தன்னை ஒரு பிராணி கவனித்துக்கொண்டே இருப்பதென்பது அவளுக்குப் பிடிக்காத செயலாகவும், அருவருப்பான செயலாகவும் இருந்தது.