பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254


“நீங்கள் இருக்கும்போது நான் வேறு எதையும் நினைப்பதில்லை” என்று கூறி அவனுடைய கண்களைக் கூர்ந்து நோக்கினான்.

இந்த மாதிரி, அவள் கூர்ந்து பார்க்கும் போதெல்லாம், யாஸ்மியைப் பற்றிய எண்ணம் உமார் மனத்தைக் கலங்கச் செய்துவிடும், அயீஷாவின் கண்களும், அவள் தலையை வேகமாகத் திருப்புகின்ற பாவமும் யாஸ்மியினுடையதைப் போலவேயிருந்தன. இத்தனையாண்டுகளும் தான் காரண மில்லாமல் யாஸ்மியைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உமார் புரிந்து கொண்டான். அவள் திடீரென்று இறந்து விட்டாள். அவளுடைய மரண வேதனை. அதைப் பற்றி அவன் ஜபாரக்குடன் கூடப் பேசவில்லை. இந்த வேதனைக் காட்சிதான் அவனை நெருப்புப் போல் எரித்துக் கொண்டிருந்தது. அதெல்லாம் விழித்துக் கொண்டிருக்கும் உண்மையான நிலையான இந்தச் சூழ்நிலையில் ஒரு பழங்கனவு போல விலகிப் போய் விட்டது.

யாஸ்மியின் கரங்களிலே அவன் அனுபவித்த இன்பம் வேதனை கலந்ததாக இருந்தது. ஆனால், அயீஷாவுடன் இருப்பது அமைதியைக் கொடுத்தது. சுற்றிலும் சுவர் எடுக்கப்பட்ட தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ரோஜாப்பூக்களின் இதழ்கள், எங்கும் பரந்து கிடப்பது போன்ற இன்பம் நிறைந்தது அயீஷாவின் அன்பு. இந்த இன்பத்திற்கு மணிக்கணக்கும் இல்லை, மனிதர்களின் குறுக்கீடும் இல்லை. இருப்பினும், இந்த இன்பத் தோட்டத்துக்குள்ளே இடையிடையே யாஸ்மியின் எண்ணமும் படர்ந்து வந்தது. சில சமயங்களில், அவள் களைத்துப் போய்க் கிடக்கும் போது, தலையைச் சிறிது தூக்கினால், விண்மீன் வீட்டை நோக்கி முக்காட்டுத் துணி காற்றில் பறக்க யாஸ்மி நடந்து வருவதைப் பார்க்கலாம் போல் தோன்றும்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, களைத்துப் போன ஒரு குதிரையிலே வந்த அவசரச் செய்தியாள் ஒருவன், நிசாம் அவர்களிடமிருந்து அழைப்புக் கொண்டு வந்தான். உடனே புறப்பட்டு எவ்வளவு சீக்கிரமாக வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாகவே நகருக்கு வரும்படி நிசாம் அறிவித்திருந்தார்.