பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255


மறுநாள் காலை உமார் அயீஷாவிடம் விடை பெற்றுக் கொண்டபோது அவள் கண்களில் நீர் நிறைந்து காணப்பட்டாள். தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படி மணிக்கணக்காக மன்றாடினாள். “தங்களை அல்லா பாதுகாப்பாராக” என்று கூறி அவன் காதுக்குள்ளே, “அயலாருடன் செல்ல நேரும் போது ஆயுதம் இல்லாமல் போகாதீர்கள்” என்று எச்சரித்தாள்.

வாசலில், இஷாக், உமாருக்குச் சலாம் செய்வதற்காக வந்தான். நெடு நாளைக்கு முன் விலக்கப்பட்ட சாம்பல் ஆகா என்பவன் மூலையிலே ஒளிவது போல உமாருக்குத் தோன்றியது. குதிரையை நிறுத்திக் கொண்டு, “என்ன இஷாக், அந்தக் கடை கட்ட கருப்பன் இன்னும் இங்கேயா சுற்றிக் கொண்டு திரிகிறான்?” என்று கேட்டான்.

இஷாக் பணிவுடன் வணங்கி, “தலைவரே! நேற்று இரவு தொழுகைக்குப் பிறகு தாங்கள் ரே நகருக்குப் பயணப்படப் போவதாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் எப்பொழுது திரும்புவீர்கள் என்பது இறைவனைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்? இந்த அரண்மனை என்னுடைய பொறுப்பில் விடப்பட்டிருக்கிற காரணத்தால்...”

“அதற்காக...?”

“எல்லாப் பெண்களையுமே கண்காணிக்க வேண்டியது இன்றியமையாதது. இத்தனை பெரிய தோட்டத்தில் ஓர் இளம் பெண் தனியாகத் திரிவது அவ்வளவு நல்லதல்ல. சாம்பல் ஆகாவும் அருகில் உள்ள ஊரிலேயே இருந்தான். ஆகவே, நான்தான்...”

உமார், தன் பின்னால் இருந்த படைவீரர்களின் பக்கம் திரும்பி, “உங்களிலே ஒருவன், அந்தக் கருப்பனைப் பிடித்துக் குதிரையிலே ஏற்றி வைத்துக் கொண்டு, நிசாப்பூரிலே கொண்டு போய் அங்குள்ள சந்தையிலே அவிழ்த்து விடுங்கள். அவன் மறுபடியும் இந்த வாசல்படி ஏறக்கூடாது. இது என் கட்டளை” என்றான்.

தன் அன்புக்குரிய அயீஷாவைத் தன் தோட்டத்திலே, இன்னொருவன் கண்காணிக்கும்படி சிறைவைத்து விட்டுப் போக உமார் விரும்பவில்லை.