பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கூட இருந்த சிப்பாய்கள் ரஹீமைப் பொறாமைக் கண்களோடு பார்த்தார்கள். சாதாரண மனிதர்களாகிய அவர்கள் இந்த மாதிரியான இன்பத்தை இந்தச் சமயத்தில் அனுபவிப்பதென்பது இயலாது. ரஹீம் போன்ற செல்வந்தர்கள் தான் நினைத்ததைச் செய்யமுடியும். அல்லா அருள் புரிந்தால், சண்டையிலே வெற்றி பெற்றுத் திரும்பும்போது, மதவிரோதிகளின் பெண்களை அடிமைகளாகப் பிடித்துவரும் நேரத்திலே ஒவ்வொரு சாதாரணச் சிப்பாயும் கூட ஆளுக்கு ஒன்றிரண்டு பெண்களோடு மகிழலாம். ரஹீம் போன திசையைப் பார்த்து ஏங்கிவிட்டுக் கணப்பிலே கதகதப்பேற்றிக் கொண்டு சிப்பாய்கள் தூங்கத் தொடங்கினார்கள்.

ரஹீம், அலுத்துச்சலித்துப் போய் நெடுநேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தான். என்னவோ அவனுக்கு நாடிப்போன இடத்தில் இன்பம் இல்லை போலிருக்கிறது. சத்திரக்காரனைத் திட்டிக் கொண்டே வந்தான், படுக்கையில் இருந்த உமார் எழுந்து நின்று கணப்புத் தீயை அதிகமாக விசிறிவிட்டுத் தன் உயிர்த்தோழனுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தான். எங்கே போயிருந்தாய் என்று கேட்ட உமாருக்குப் பதில் சொல்லாமல் சத்திரக்காரனைக் கண்டபடி திட்டிக் கொண்டே அருகில் உட்கார்ந்த ரஹீம், “நீ எங்கே போயிருந்தாய்?” என்று உமாரைத் திருப்பிக் கேட்டான்.

உமார், சண்டைக் களத்திற்கே புதியவன். ஆனால் பாலைவனப் பிரதேசங்களிலே அலைந்து திரிந்து அனுபவப்பட்டவன். அதிலும் அந்தக் கொரசான் வீதி நெடுகிலும் அந்தச் சமயம் கலகலப்பாக இருந்தது. ஆங்காங்கே நடந்துவரும் படைகளும் வழிச் சத்திரங்களில் தங்கியிருக்கும் வீரர்களும், போரிலே பங்கு கொள்ளத் தேசத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து கூடாரமடித்துக் கொண்டிருக்கும் இளவரசர்களும் இப்படியாக அந்தப் பாதை நெடுகிலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. உமாருக்கு எல்லா விஷயங்களிலும் ஆர்வமாயிருந்தது. பலப்பல பகுதிப் படைகள் தங்கியிருக்கும் இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் விசாரிப்பதும், பேசிக் கொண்டிருப்பதும், அவர்கள் கொண்டு வந்திருக்கும் சாமான்களைப் பார்வையிடுவதுமாக அவன் திரிந்தான்.