பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258


32. வாளாயுதம் நீதி வழங்கிய காட்சி!

நிசாம் அல்முல்க் அவர்களுக்கு நேர் எதிராக ரத்தினக்கம்பளத்தில் உமார் உட்கார்ந்திருந்தான். அரசருடைய வானநூற் கலைஞன், உலக அமைப்பாளரான நிசாமிடம் எதிர்த்துப் பேசியது இதுதான் முதல் தடவை. அந்த வியப்பிலிருந்து அவர் இன்னும் மாறுதல் அடையவில்லை.

“நம்முடைய முன்னேற்றப் பாதையிலே நீ ஏன் மறுப்பு என்கிற கல்லைத் தூக்கி யெறிந்தாய்?” என்று நிசாம் திரும்பத் திரும்பக் கேட்டார்.

விஷயத்தை அறிந்து கொள்வதில் அவசரப்பட்டாலும் நிசாம் அமைதியாகவே விளங்கினார். சேல்ஜக் சாம்ராஜ்யத்தைக் கிட்டத்தட்ட இரண்டு தலை முறைகளாக அவர் பொறுப்புடன் நிர்வகித்து வளர்த்து வருகிறார். பாலைவனப் பிரதேசத்திலிருந்து தொடங்கிச் சீனத்துப் பெருஞ்சுவர் வரையிலும், கான்ஸ்டான்டிநோபிள் கோட்டை கண்ணுக் கெட்டுந்துரம் வரையில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கால்வாயின் குறுக்காக அவருடைய உழைப்பின் பயனாக உருவான சாம்ராஜ்யம் பரந்து கிடந்தது. வடக்குப் பனிப் பிரதேசத்திலிருந்து தெற்குப் பாலைவனப் பிரதேசமான அரேபிய நாடு வரை யிருந்தது.

மெலிந்த தன் விரலில் இருந்த முத்திரை மோதிரத்தைச் சுற்றித் திருப்பிக்கொண்டே நிசாம் பேசினார். அரசர் உலகமென்னும் குடும்பத்தின் தந்தை போன்ற நிலையில் இருப்பவர். அவருடைய செயல்கள் அவருடைய பதவிக்குத் தகுந்தபடி இருக்க வேண்டும். அவருடைய போராடுந் திறமை வேற்று மதத்தைச் சேர்ந்த மக்களினங்களையும் அவர்களுடைய நாடுகளையும் இஸ்லாமியக்கொடியின் கீழ்க் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அவரடைந்த வெற்றிகள் தாய்நாட்டில், அவருடைய நிலையை உயர்த்தியிருக்கின்றன. இவ்வளவு இருப்பினும், சுல்தான் மாலிக்ஷா நாகரிக மில்லாத துருக்கியன் ஒருவனின் பேரனே. அவருடைய நாற்பது லட்சம் படைவீரர்கள் படைகள், அமைதி தவழும் இந்தக் கொரசான் நாட்டு