பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263


“ஆபத்து ஒன்றுமில்லையே! போர் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று நிசாம் விரும்புகிறார் என்று எழுதுகிறேனே!” என்றான் உமார் புன்சிரிப்புடன்!

“அட, ஆண்டவனே! உமார் நீ என்ன குழந்தை மாதிரி விளையாடுகிறாய்?”

“அப்படியானால், நான் உண்மையாகச் சொல்கிறேன். அப்படியும் எழுத மாட்டேன். இப்படியும் எழுத மாட்டேன். உண்மையையும் எழுத மாட்டேன்; பொய்யையும் எழுத மாட்டேன்; எதையுமே நான் எழுதப் போவதில்லை”.

அந்தக் கடைசி வாக்கியம் நிசாமின் காதில் அறைவதுபோல விழுந்தது. வலைபோல் பின்னிக் கிடந்த அவருடைய முகச் சுருக்கங்களுக்கு மத்தியின் இருந்த கண்களால் அவனை உற்று நாக்கினார். தன் கைகளால் முழங்கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, “என்னிடமா இப்படிச் சொல்லுகின்றாய்?” என்று கூவினார்.

“சொன்னது சொன்னதுதான்; சொல்லாமல் இருக்கப் போவதில்லை” என்று அமைதியாக உமார் பதில் அளித்தான்.

சிறிதுநேரம் நிசாம் பேசாமல் இருந்தார். “சாதாரண கந்தைத் துணியுடன் திரிந்த மாணவனான உன்னை இந்த சாம்ராஜ்யத்தின் சிறப்புக்குரிய மூன்றாவது தகுதிக்கு நான் உயர்த்திவிட்டேன். புதிய பஞ்சாங்கம் அமைத்தபோது, முல்லாக்கள் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்லாமல் காத்தவன் நான்! உன்னுடைய ஆராய்ச்சியிலே உதவி செய்வதற்குப் பெரும் பெரும் பேராசிரியர்களையெல்லாம் கொடுத்தேன். இப்பொழுது உனக்குச் சொந்தமாக எத்தனை அரண்மனைகள், எவ்வளவு சொத்துக்கள்! எவ்வளவு பொன் நாணயங்கள் இருக்கின்றன. அத்தனையும் யாரால் வந்தன? இப்பொழுது நீ உண்மையே பேசுவேன் என்கிறாயே, இதற்குமுன் சுல்தான் மாலிக்ஷாவிடம் எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா? அதெல்லாம் போகட்டும், நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உண்மையாகப் பதில் சொல். என்னுடைய திட்டங்களைச் சிதைக்க வேண்டும் என்று நீ எண்ணுவதற்குக் காரணம் என்ன?”