பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275

அக்ரோனோஸ், உமாரை யாரும் எளிதில் தெரிந்துகொள்வார்கள். ஆகையால், அவன் மாறுவேடம் போட்டுக் கொள்ளவேண்டும் என்றான். அதன்படி உமாரை மது வியாபாரி ஒருவனுடைய கடையின் மேல் அறையொன்றுக்கு கூட்டிச் சென்றான். அங்கேயிருந்த ஒருபெண், உமாரினுடைய தாடியைச் சிறிது வெட்டி யெடுத்து அதற்குச் சாயம் பூசி மாற்றினாள். பிறகு, அவன் முகத்தையும் கழுத்தையும் தாடியைக் காட்டிலும் கருப்பாக வரும்படி ஆளிவிதைச் சாற்றைத் தடவினாள்.

“தேசாந்திரம் பயணம் செல்லும் எல்லா மனிதர்களையும் செல்மாவுக்குத் தெரியும். இந்துப்பக்கிரி யொருவரை ஆப்பிரிக்கா தேசத்துக் கொக்காக மாற்றிவிடக் கூடிய திறமை அவளுக்கு இருக்கிறது” என்று அவளைப் பாராட்டிப் பேசினான் அக்ரோனோஸ்.

செல்மா அசடுபோல் சிரித்தாள். அவள் உமார் போன்ற அழகிய கனவான் யாருடனும் இதுவரை பழகியதில்லை. அவளுடைய கணவனும் பாராட்டுத்தலைக் கேட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தான்.

செல்மா அவளுடைய ஒப்பனை வேலையை முடித்ததும் உமார் எழுந்து நின்றான். மிருதுவான பட்டுச் சட்டையுடன் அகன்ற தோல்கால் சராய் அணிந்து, விரல்களுக்குமேலே வளைந்து செல்லும் மிதியடியுடன் நின்றான். “இவர்தான் போக்கரானிய குதிரை வியாபாரி மட்டக்குதிரைகள் வாங்குவதற்காக மலைப் பிரதேசத்திற்குச் செல்கிறார்” என்றான், அக்ரோனோஸ். “அப்படியானால், துருக்கிய மொழியில் பேசுங்கள். அடிக்கடி எச்சில் துப்பிக்கொண்டிருங்கள். இரண்டு கைகளாலும் சாப்பிடவேண்டும. இதோ இப்படி மூச்சுவிட வேண்டும்” என்று வேகமாக மூச்சுவிட்டுக் காண்பித்த செல்மா, ஒருமாதிரியாக நடந்து காண்பித்து, “இப்படிலேசாக முழங்காலை வளைத்து நடக்கவேண்டும். அப்பொழுதுதான், இடைவிடாமல் குதிரையில் உட்கார்ந்ததால் இந்த போக்கரானியனுக்கு முழங்கால் வளைந்துவிட்டது என்று தோன்றும். எல்லோருக்கும் எதிரில் கழுதைப் பாலைக் குடிக்கவேண்டும். இப்படியெல்லாம், வேஷத்துக்குத் தகுந்தபடி நடந்தால் உங்கள் சொந்த மனைவிகூட உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாது” என்று செல்மா யோசனை கூறினாள்.