பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289

ஓர் உருவம் தோற்ற மெடுத்தது. புலிநகப் பாதங்களும், சிங்கக்கால்களும், காளை மாட்டின் உடலும் சுருண்டு கிடக்கும் முடியுடன் கூடிய மனிதத் தலையும் கொண்ட பயங்கரமான ஒரு பிராணியின் உருவம் தோன்றியது. அதன் தலையின் இருபுறமும் இறக்கைகள் தோன்றின. அது கல்லால் ஆகிய உருவமாக இருந்துங்கூட, மங்கலாகத் தோன்றிய வெளிச்சம் அதற்கு உயிர் இருப்பதுபோல் தோன்றச் செய்தது. “இதோ, இப்பொழுது அவன் சொர்க்கத்திற்குப் போகிறான்” என்று ரக்கின் உட்டின் கூவினான்.

கத்திகள் சுழன்ற பக்கமெல்லாம் கழுத்தைத் திருப்பிக் குதிகாலால் சுழன்றுகொண்டிருந்த அந்த அரை ஆடை மனிதன், அசையாமல் நின்றான். கத்தி முனைகள் அவன் உடலைத் தீண்டின. சதையைக் கிழித்தன. சிவந்த குருதி அவன் அரையில் கட்டியிருந்த வெள்ளை ஆடையின் மீது பாய்ந்து ஓடியது. பெருத்த வேதனையுடன் அவன் கதறிக் கொண்டிருக்க இரத்தக் கறை எங்கும் படிந்தது. அவனுடைய தூக்கியிருந்த கைகள் பக்கவாட்டில் தொங்கி விழுந்தன.

அவனுடைய தோளுக்கு மேலே பாய்ந்து சென்ற ஒரு வாள் அவனுடைய தலையைத் துண்டித்தது. சிறிது நேரம் உடல் துடி துடித்தது; கைகள் ஆடின; பிறகு தரையிலே விழுந்து பட்டது.

அந்த உடல் துடித்து விழுந்த உடனே அங்கு ஒலித்துக் கொண்டிருந்த இசையும் இல்லாஹி என்ற ஓசையும் நின்றன. உமாரும் ரக்கின் உட்டினும் தவிர மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்புறம் நோக்கிப்பாய்ந்து சென்றார்கள்.

அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் “பிறப்பிறப்புப் பெருந்தலைவர்” என்று கூவியது.

தாடிக்காரன் காளை உருவத்தின் கால் நகங்களுக்கு இடையேயுள்ள இடத்திலிருந்து மின்னும் வெள்ளாடையணிந்த ஒரு நீண்ட உருவம் அடியெடுத்து வைத்து வெளியில் வந்தது. கைமணிக் கட்டிலிருந்து கழுத்து வரைக்கும், சவத்துக்குச் சுற்றியதுபோல அந்த உடல் சுற்றப்பட்டிருந்தது. ஆனால், அந்த உடலின்மேல் தோன்றிய தலை ஹாஸான் இபின் சாபாவினுடையதாக இருந்தது.

உ.க. 19