பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305

பார்த்தாய், பிரசாரகர்களுடன் பேசினாய். நாங்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் எங்கள் அறிவை முழுமையடைய முயல்கிறோம் என்பதை நீ அறிந்திருக்கக்கூடும். ஆனால், பாரசீகர்கள், மறையில் உள்ளது தவிர வேறு எதையும் கண் கொடுத்துப் பார்க்கவோ. காது கொடுத்துக் கேட்கவோ மாட்டார்கள் என்பதை நீ அறிவாய். அதை மறுக்க முடியாது, ஒன்றுமே அறியாத பாமரர் பலர் எங்களிடையே தேவைப் படுகிறது. கூட்டத்தைப் பெருக்குவதற்கும் உயிர் கொடுத்துப் போராடுவதற்கும் எந்தவிதமான அறிவும் இல்லாத அந்தக் கூட்டத்தின் உதவி தேவைப்படுகிற காரணத்தால், அறிவில்லாத மக்களிடையே, ஏழாவது மாதி ஒருவர் வருவார் என்று பிரசாரம் செய்கிறோம். இது வழக்கத்திலே இருந்து வருகிற ஒரு இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பிரசாரமே. அறிவுள்ளவர்களுக்கு, நாங்கள் விஞ்ஞானப் புதுப்பேரொளியை அடையுமாறு போதிக்கிறோம்” உறுதியான தவிர்க்க முடியாத ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கிக் கூறுபவன் போல் தோளைக் குலுக்கிக் கொண்டான் ஹாஸான்.

“உயிர்ப் பிறப்பின் அடிப்படையே இந்த முறையில் தானே அமைக்கப்பட்டிருக்கிறது? உன்னிடம் தன் தனியறையில் பேசுகிற விஷயங்களை நிசாம் முல்லாக்களிடம் பேசுகிறாரா?” என்று கேட்டான்.

“அந்த மாதிரி நடந்து விடாமல் அவர் கவனமாக இருக்கிறார்” என்றான் உமார்.

“அது போலத்தான் நாங்கள் பாமரருக்கொரு பழங் கொள்கையும், பகுத்தறிவாளர்க்கொரு விஞ்ஞான முறையும் வைத்திருக்கிறோம். பிளாட்டோவின் அறிவு விளக்க நூலிலே கூறப்படுகிற விஷயம் உனக்குத் தெரிந்திருக்கும். அதுதான் உலகங்களின் அமைப்பு. வெளிச்சம் இருந்தால் இருட்டும் இருக்கும். மனிதன் இருந்தால் அவனுக்குத் துணையாகப் பெண்ணும் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்று சேரும்போதுதான் குறிக்கோள் நிறைவேற முடியும். அதுபோலவே, எங்களுடைய அமைப்பு இந்த மாற்றத்தின் மூலம் ஒன்று படுகிறது. எல்லாவிதமான இனத்தாரிடமிருந்தும் மதமாறிய உண்மையானவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.”