பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306


“நீ ஏன் மாய வித்தையைப் பயன்படுத்துகிறாய்?”

“ஏன் கூடாது? அதுதான் மிக உயர்ந்த ஞானம்!”

“சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அது உயர்ந்த ஞானமாக இருக்கலாம். உன்னுடைய தபால் புறாக்களும், பழக்கப்பட்ட கழுகும் பாமர மனிதனுக்கு வீதி வித்தையாகத் தோன்றலாம்.”

“புத்திசாலிகளுக்கும், அதைக் காட்டிலும் உயர்ந்த கண்கட்டுவித்தை என்னிடம் இருக்கிறது. எகிப்து தேசத்திலே நான் பயின்ற சில மாய வித்தைகள் இருக்கின்றன” என் சடக்கென்று தன் பேச்சை நிறுத்திய ஹாஸான், உமாரை நோக்கி, “பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே ரோமானியப் பேரரசனும், சுல்தான் ஆல்ப் அர்சலானும் இறந்து போவார்கள் என்று மாலிக்ஷாவுக்குச் சோதிடம் கூறினாயே, அது எந்தவிதமான கலை?” என்று கேட்டான்.

பதில் கூறப்போகும் சமயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஓர் உள் உணர்வு உண்டாகவே, உமார், கவனத்துடன் அமைதியாக, “அது ஓர் அற்புத சக்தி, அது என்னுடைய இரகசியம்” என்று கூறினான்.

“நான் உன்னிடம் என்னுடைய இரகசியங்கள் அனைத்தையும் உடைத்துப் பேசி விட்டேன். ஆனால்... நீ...?” என்று ஹாசான் கேட்டான்.

“எல்லாம் சொன்னாய். ஆனால், ஒன்று சொல்லவில்லை.”

அவனைக் குறிப்பாகப் பார்த்த ஹாஸான் “அது என்ன?” என்று கேட்டான்.

“உன்னுடைய மதத்திலே உள்ள அந்த உயர்ந்த இரு பிரிவினரும் எதை நம்புகிறார்கள்? உன்னுடைய பிரசாரங்களுக்கும் உயர்ந்த தகுதியுடைய அவர்கள். எகிப்திலே உள்ளவர்கள் எதை நம்புகிறார்கள் என்று நீ கூறவில்லையே.”

“பிஸ்மில்லா!... நான் அவர்கள் எகிப்திலே இருக்கிறார்கள் என்று சொல்லவில்லையே!”

“நீ சொல்லவில்லை. ஆனால் நான் அங்கே அவர்கள் இருக்கலாமென்று எண்ணினேன்.”