பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307


“நீ நினைத்தாயா? அது ஒரு வீண் நினைப்பாக இருக்குமானால், அந்த நினைப்புக்கு நீ என்ன காரணம் கூறப் போகிறாய்?” என்று கேட்ட ஹாஸான், எழுந்து அந்த அறையில் அங்குமிங்கும் நடந்து கொண்டே, “குவாஜா, உமார்! பாபிலோனில் உன்னைப் பார்த்த பொழுது நான் புகழ்ந்தேன். ஜெருசலத்திலே சந்தித்தபோது உன்னைக் கூட்டாளியாகப் பெற வேண்டுமென்று விரும்பினேன். ஆண்டுகள் கடந்து கொண்டு போகும்போது, காலப்போக்கில் நான் எத்தனையோ விஷயங்களைக் கற்றேன். ஆனால், உமார், நீ அப்படியே இருக்கிறாய். உன் அறிவு விசாலமடையவில்லை. உன்னுடைய முட்டாள்தனமான ஜோதிடங்கள் இனிப் பலிக்கப்போவதில்லை.”

“உலக அமைப்பாளருடன் தொடர்ந்து இருப்பதற்கு, இனிமேல் உனக்குச் சரிப்பட்டு வராது. மேலும் நிசாமின் ஆதரவை நீ இழந்து விட்டாய் என்று எண்ணுகிறேன், புதிய மத அமைப்பாளராகிய நாங்கள் உனக்காகச் செய்திருப்பதை நீ நினைத்துப்பார். நான் அக்ரோனோசிடம் உன்னுடைய எதிர்காலத்திற்குப் பொருள் பெருக்கி உதவும்படி கூறினேன். அவன் அவ்வாறே உனக்குப் பலவித உதவிகள் உள்ளத்தின் உண்மையாகச் செய்திருக்கிறான். பாலைவனப் பிரதேசத்திலே எபிரேட்ஸ் ஆற்றிலே விழுந்து இறக்கப் போன உன்னை, துன்பத்தால் செத்துப்போகக்கூடிய உன்னை அக்ரோனோஸ் காப்பாற்றி இருக்கிறான். அவன் உன்னுடைய அரண்மனைகளில், நாகரிகப் பொருள்கள் பலவற்றைக் கொண்டு வந்து நிரப்பி உன்னை உல்லாச வாழ்க்கை வாழச் செய்திருக்கிறான். நீ எங்களிடம் திரும்ப வேண்டுமென்று அவனும் நானும் காத்திருந்தோம்.”

“நான் உன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்திருக்கிறேன் என்று நீ சொல்லக்கூடும். அப்படியே நான் எதிர்பார்த்து உனக்கு நன்மை செய்வதாக ஒப்புக் கொண்டாலும்கூட, நண்பன் ஒருவன் உன் நட்பை எதிர்பார்க்கும் முறையிலேதான் இவற்றைச் செய்தேன். உன்னுடைய புதிய பஞ்சாங்கம், உன்னுடைய புத்தகங்கள், நிசாப்பூரிலேயுள்ள உன்னுடைய ஆராய்ச்சிக்கூடம் இவை ஒவ்வொன்றையும் நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

இதுபோல, இஸ்லாத்தின் தலைவர்கள் உனக்குத் தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா? உன்னை நேசிக்கும் மாலிக்ஷா